பதில் தெரியாத ஒரு கேள்வி...

ஜமீனுடனான தனது அனுபவங்களை பற்றி Mr.யூ.கே தொடர்கிறார்:

அட.. இன்னும் முழுசா ரெண்டு பதிவுகூட போடலை அதற்குள் இந்தியா ஆஸ்திரேலியா செகண்ட் பைனல் ரேஞ்சுக்கு பரபரப்பு தொத்திக்கிச்சே.. எல்லாம் எதிர்பார்த்ததுதான்.. சரி நம்ம மொக்கையை தொடருவோம்.

ஜமீன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா தலைக்கு தாழ்வு மனப்பான்மைங்கற விஷயம் கடுகளவுக்கு கூட கிடையாது. இது ஜமீனை நக்கல் பண்றதுக்காக சொல்லலை. சத்தியமான உண்மை. எனக்கு ஜமீன் அறிமுகமான முதல் நாளிலிருந்து இன்றுவரைக்கும் தனது உயரத்தைக் குறித்து கவலைப்பட்டதோ அல்லது அதைவைத்து மற்றவர் ஜமீனை கிண்டல் செய்ததாகவோ ஒரு நிகழ்ச்சி கூட கிடையாது என உறுதியாக கூறமுடியும்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது. நம்ம கே.கே தன் பதிவுல சொன்ன விஷயம் இது. இது நூத்துக்கு நூறு உண்மை.


ஏன் சொல்றேன்னா எங்க காலேஜ்ல மச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வயசுக்கு அவனவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். ஆனால் மச்சியோ அந்தவயதில் எங்களுடன் காலேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு படிப்பின்மேல் தீராத ஆர்வம்(?). சரி விஷயத்துக்கு வருவோம்.காலேஜில் ரவுடிகளாக வலம்வந்த சில மாணவர்கள் கூட மச்சியை கண்டால் மரியாதையுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நழுவிவிடுவர். இப்படிப்பட்ட மச்சியை ஜமீன் அழைப்பது யோவ் பெருசு! என்றுதான். அதுவும் உ.பா துணையுடன் இருக்கும் நேரங்களில் அன்புடன் வாடா,போடா எனவும் அழைப்பதுண்டு. மச்சி வயசு என்ன? நம்ம எப்படி? இந்த மாதிரியெல்லாம் ஜமீன் கூச்சப்பட்டு பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு ஜமீன் நட்புக்கும், நண்பர்களுக்கும் மரியாதை(?) கொடுப்பவர்.

அதேபோன்று ஜமீனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் பின் நானே ஜமீனின் தைரியத்தை பலரிடம் பரப்பினேன். அந்த இனிமையான நிகழ்வை இப்போது நேரமில்லாத காரணத்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிக்கிறேன்.

ஒருமுறை ஜமீனிடம் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஜமீன்! உனக்கு எதுக்கு ஜமீன் அப்படின்னு பெயர் வந்தது? யார் வைச்சாங்க?" என ஆவலாகக் கேட்டேன். உடனே ஜமீன் "அதுவா மச்சி! ஒரு கிங்ஸ் வாங்கு சொல்றேன்.. என்றார். நானும் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த காரணத்தை அறியும் ஆவலில் கிங்ஸ் வாங்கி கொடுத்தேன். பற்றவத்து புகைத்த ஜமீனைப் பார்த்து, "ஜமீன் நான் கேட்டது?" என்று ஞாபகப்படுத்த "ஸ்ஸ்ஸ்... தம்மடிக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.. அசிங்கமா இல்லையா அண்ணனுக்கு.." என்ற ஜமீன் "தம்"மை தொடர்ந்தார். எல்லாம் நேரம்டா மகனே! என்று மனதுக்குள் நினைத்தபடியே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன்.கிங்ஸ் எண்ணிக்கை மட்டும் 1..2..3.. என பழைய இந்திய அணியின் ஸ்கோர்போர்டு போல் தொடர எதிர்பார்த்த பதிலைத்தான் காணோம். சரி.. இதற்குமேலும் வெயிட் செய்தால் கடைசியாக பஸ்ஸிக்கு பைசா இல்லாமல் நடந்துதான் ரூமுக்கு போகவேண்டுமென்ற யதார்த்த நிலை உறைக்க "சரி ஜமீன் நீ யோசிச்சு அப்புறமா சொல்லு.. எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்.." என்று நழுவினேன்.

(ஆனால் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஜமீனிடமிருந்து வரவில்லை.யார் மூலமாகவாவது இந்தப் பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகத்தின் ஏதோ ஒரு மூலையிருந்து படித்துவிட்டு அந்தக் கேள்விக்கான பதிலை ஜமீன் விரைவில் சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் யூ.கே வாகிய நான் இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்)

ஜமீனுடனான மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். - யூ.கே