சென்னையில் நடந்த தமிழ்மண நிர்வாகிகளுடனான சந்திப்பு 15-06-08

அன்று ஞாயிற்றுகிழமை. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நண்பரை பார்க்க மயிலாப்பூர் சென்றிருந்தோம். பரஸ்பர உரையாடல்களுக்கு பின் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்த இன்னொரு நண்பரை பார்த்துவிட்டு வரலாம் என முடிவுசெய்து, நண்பரோடு கிளம்பினோம். மயிலாப்பூர் லஸ்ஸிலிருந்து 12B யில் ஏறியாகிவிட்டது. ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகில் வந்தபோது நடத்துனர் "எல்டாம்ஸ் ரோடு போறவங்க எல்லாம் இங்கேயே இறங்கிக்குங்க. ஏதோ மீட்டிங் நடக்குதாம். வண்டி அந்த வழியாக போகாது" என்றதும் அங்கேயே இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

"மாப்பி! என்னாடா மீட்டிங்? போக்குவரத்து எல்லாம் தடை பண்ணி இருக்காங்க?"

"தெரியலை நண்பா.. ஏதாவது கட்சிகாரங்க வீட்டு கல்யாணமாக இருக்கும்" என பேசிக்கொண்டே நானும், நண்பரும் நடக்க ஆரம்பித்தோம்.

எல்டாம்ஸ் ரோட்டின் துவக்கத்திலேயே சாலையின் குறுக்கே தடுப்பு கட்டைகள் வைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எமதர்மராஜா போல் மீசையும், நிறைமாத கர்ப்பிணி பெண்போல் தொப்பையையும் வைத்திருந்த ஒரு காவல் அதிகாரி அதன் அருகிலேயே நின்றவாறு அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

எங்கள் இருவரையும் பார்த்ததும் "தம்பி! எங்கே போறீங்க?" என மிரட்ட, இதோ இங்கேதான் ஸார்.. இந்த பேங்க்குக்கு பின்னால நண்பரோட அறைக்கு போகனும்" என்றோம் பயத்துடன்.

"அங்கே இன்னைக்கு மீட்டிங் நடக்குது. இந்தவழியா போகக்கூடாதுன்னு தெரியாது?" என்றார் அதே மிரட்டும் தொணியில்.

"இல்லை ஸார்.. கொஞ்சம் விட்டிங்கன்னா அப்படியே ஓரமாகவே போய்டுவோம். ப்ளீஸ் ஸார்"

"சரி.. சரி.. சீக்கிரம் போங்க" என்று பெரிய மனதுடன் எங்களை அனுமதித்தார்.

சாலையில் நுழைந்தவுடன் ஒரு பெரிய கட் அவுட் ஒன்று எங்களை வரவேற்றது. கட் அவுட்டில் ஒரு இளைஞர்(?) இருகரம் கூப்பியபடியே சிரித்துக் கொண்டிருந்தார்.

"யார் மாப்பி இது? புதுசா இருக்கார்?" என்ற நண்பரிடம்,

"தெரியலை நண்பா.. ஆனால் எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு..ஆங் எங்கேன்னுதான் தெரியலை" என்றவாறே தொடர்ந்து நடந்தோம்.

"சரி.. நம்ம்க்கென்ன மாப்பி! வந்தவேலையை பார்ப்போம். சீக்கிரம் போகலாம் வா"

இதற்குள் அந்த கல்யாண மண்டபத்தை நெருங்கியிருந்தோம். மண்டப வாசலில் குழுமியிருந்த சிலர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து மண்டபத்தினுள் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர். சாலையில் நடந்து செல்வோரையும் விடவில்லை.

"என்னா மாப்பி! புதுசா இருக்கு.. சாலையில் போறவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறாங்க.. ஒருவேளை ஏதாவது கட்சிக்கு ஆள் சேர்க்கறாங்களோ?"

"எதுவாயிருந்தா நமக்கென்ன நண்பா.. நம்ம வந்த வேலையை பார்ப்போம் வா" என்றபடியே வேகமாக நடந்தோம். அப்போதுதான் அந்த கும்பலில் நின்றிருந்த அந்த நபரைப் பார்த்தோம்.

"அய்யய்யோ! இவரா.. " என அதிர்ந்தபடியே, "நண்பா! வா இப்படியே திரும்பி போயிடுவோம்" என்றோம் அவசரமாக.

"என்னா மாப்பி! இவ்வளவு தூரம் வந்துட்டு திரும்பி போகலாம்கிறே.. அங்கே அந்த போலீஸ்கார மாமா பார்த்தா அடிப்பாரே"

"அவர் அடிச்சா கூட பரவாயில்லே நண்பா.. இவங்ககிட்ட மாட்டினேன்னு வை.. அவ்வளவுதான்"

"என்ன மாப்பி சொல்றே? இவங்களை உனக்கு முன்னமே தெரியுமா?"

"ஆமா நண்பா.. போனவாரம் காந்திசிலை பக்கத்திலே மாட்டினேன்னு சொன்னேன்ல. அது இந்த குரூப்தான்பா.. அப்பவே சொன்னாங்க இந்தவாரம் இங்கே சந்திச்சு கும்மியடிக்கலாம்னு.. நான்தான் மறந்துபோய் இந்தபக்கம் வந்துட்டேன்பா"

"அப்புறம் கட்அவுட்லே பார்த்தோம்ல அவர் கூட யாருன்னு இப்போ ஞாபகம் வந்துடுச்சு. அவர்தான் நண்பா டோண்டு ராகவன் ஸார். போனவாரம் கும்மியடிச்ச கூட்டத்திலே அவரும்தான் இருந்தாரு"

"அப்படியா மாப்பி! சரி வா திரும்பிடலாம்" என்ற நண்பனுடன் கிளம்பியபோது அந்த கூட்டத்தில் தலைபோல் நின்றிருந்த பாலபாரதி எங்களை பார்த்துவிட்டார்.

"தம்பி! நீங்களா தம்பி வாங்கவாங்க.. பரவாயில்லையே சொன்னமாதிரியே வந்துட்டிங்களே.." என்றபடியே வேகமாக எங்களிடம் வந்தார்.

"இன்னும் சந்திப்பு ஆரம்பிக்கலை தம்பி! சரியான நேரத்திற்குதான் வந்திருக்கிங்க. வாங்க உள்ளே போகலாம்"

"சரி.. இனி கடவுள் விட்டவழி" என்றவாறே அவருடன் நடக்க ஆரம்பித்தோம்.

உள்ளே நுழைந்து பார்த்தபோது அந்த மண்டபமே நிறைந்து காணப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி மைக் வைத்து ஒரு சட்டமன்ற கூட்டத்தொடர் ரேஞ்சுக்கு அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சிறிதுநேரத்தில் பாலபாரதி "எல்லாம் ரெடியாப்பா?" என்றதும் எங்கள் அருகிலிருந்த டாக்டர் புருனோ "ம்.. எல்லாம் தயாரா இருக்குங்க. இப்போதான் வந்தது" என்றார்.

எதைச் சொல்கிறார் என வெளியே எட்டிப்பார்த்தால் சிறப்பு மருத்துவர் குழுவுடன் இரண்டு ஆம்புலன்ஸ்களை வெளியில் நிறுத்தி வைத்திருந்தார்.

நண்பர் லக்கிலுக்கோ கழகத்தில் தனக்கு இருக்கும் பவரை பயன்படுத்தி கலைஞர் தொலைக்காட்சி குழுவினரை வரவழைத்து, நேரலைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஒருவழியாக கூட்டம் ஆரம்பித்தது. பரவலாக பதிவர்களிடமிருந்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து பதில் கிடைத்தது.
அதேபோல் பதிவர்கள் கூறிய குறைகளையும் கவனமாக கேட்டுக்கொண்டனர். நமது அருகில் இருந்த லக்கிலுக்கோ அமைதியாகவே இருந்தார்.

பாலபாரதி எங்களை நோக்கி வேகமாக வரவும், போச்சுடா நம்மை ஏதாவது கேட்க சொல்வாரோ? என பயத்துடன் பார்த்தோம். நல்லவேளையாக லக்கிலுக்கை பார்த்து "ஏதாவது கேளுப்பா. சும்மாவே உட்கார்ந்திருக்கே" என்றதும், லக்கிலுக் "வேணாம் தலை.. வேணாம் விடுங்க.. அப்புறம் நான் ஏதாவது எசகுபிசகா கேட்டுடுவேன். என்றார்.

"அப்படி என்னதான் கேட்கிறேன்னு பார்க்கலாம். கேளுய்யா" என்றார் பாலபாரதி.

எழுந்த லக்கிலுக் நிர்வாகிகளை பார்த்து "தமிழ்மணம்னு சொல்றீங்க. தளத்தை திறந்தால் மணமே வரலையே ஏன்?" என்றதும், தமிழ்மண நிர்வாகிகள் பதில்தெரியாமல் பரிதாபமாக பார்த்தனர்.

இதற்கிடையே சிற்றுண்டி இடைவேளை விடப்பட, கிடைத்த இடைவெளியில் பதுங்கி பதுங்கி வெளியேறினோம்.

சந்திப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.




பி.கு: வழக்கம்போல் ஒரு மொக்கைபதிவு. சந்திப்பு முடிந்தபின்னர் விரிவாக எழுதுகிறோம்.