test

test

TBCD யின் நிறைவேறாத குல்ஃபி ஐஸ் ஆசை - 06-08-2008 சென்னை பதிவர் சந்திப்பு

நீண்ட நாட்களாக பதிவே போடாமல் இருந்தபோதிலும் கூட சொந்தமாக ஜிங்காரோ ஜமீன் என்ற உலக புகழ்பெற்ற ஒரு வலைப்பூ வைத்திருந்த ஒரே காரணத்தால் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என வடிவேலு போலிஸ் ஜீப்பில் ஏறியதைபோல் நானும் பதிவர்தான் என வழக்கம்போல் இந்த பதிவர் சந்திப்பிலும் போய் ஒரு அட்டெனென்சை போட்டோம்.

TBCD அண்ணாச்சி விடுத்த அழைப்புக்கு கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போனவர்களைவிட, முன்னறிவிப்பின்றி வந்தவர்களே அதிகம். நாங்கள் அங்கே சென்றடைந்தபோது பதிவர் சந்திப்பின் நாயகன் TBCD, முரளிகண்ணனும் ஏற்கனவே ஆஜராகியிருந்தனர். கொஞ்சநேரத்தில் நரசிம் மற்றும் அவரது நண்பர் சம்பத் ஆகியோர் வந்தனர். பின்னாலேயே டாக்டர் புருனோவும் வந்துசேர்ந்தார். மற்ற பதிவர்களும் வந்துசேரட்டும் என காத்திருக்க ஆரம்பித்த நேரத்தில் பொதுவாக பேசியபடியே அமர்ந்திருந்தோம்.

கடலை போட பெண் பதிவர்கள் யாரும் வரவில்லையே என்ற குறையை டாக்டர் புருனோ வறுத்த கடலையை ஸ்பான்ஸர் செய்து தீர்த்து வைத்தார்.

சிறிதுநேரத்தில் யூத்விகடன் புகழ் லக்கிலுக், அதிஷா, கடலையூர் செல்வம், சிவஞானம்ஜி ஐயா, வளர்மதி, தலை யெஸ்.பாலபாரதி என அனைவரும் வந்துசேர பல விஷயங்கள் குறித்து பரபரப்பாக அலசப்பட்டது.

பேசிய விஷயங்களை குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமானால் டாக்டர் புருனோ அவர்களின் இந்த பதிவை படித்துபாருங்கள்.

TBCDயோ நீண்ட நேரமாக காந்தி சிலையின் அருகே விற்றுகொண்டிருந்த குல்ஃபி ஐஸ் வண்டியை பார்த்தவாறே "குல்ஃபி சாப்பிடலாமா?" என ஒவ்வொருவராக கேட்டு கொண்டிருந்தார். பரபரப்பான விவாதங்களுக்கு இடையிலும்கூட அவ்வப்போது குல்ஃபி ஐஸ் வண்டியையே ஆவலாக திரும்பிதிரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருவரும் துணைக்கு வராததால் கடைசிவரைக்கும் குல்ஃபியை சாப்பிடாமலே கிளம்பிவிட்டார். :(

கடைசியில் வழக்கமான டீக்கடையில் தேநீர் பான விருந்துடன் சந்திப்பு 9 மணிக்கு இனிதே முடிவடைந்தது.


விடுபட்டவை:

1. TBCD பதிவில் கலந்துகொள்பவர்களுக்கு சூடான போண்டா தருவதாக சொல்லியிருந்தபடி கடைசிவரைக்கும் போண்டா வாங்கி தரவே இல்லை.

2. அதிஷா கலந்துகொள்ளும் பதிவர்கள் அனைவருக்கும் பத்துக்கு பத்து டிவிடி இலவசமாக வழங்கப்படும் என சொன்னதும் நடக்கவில்லை.

சென்னையில் நடந்த தமிழ்மண நிர்வாகிகளுடனான சந்திப்பு 15-06-08

அன்று ஞாயிற்றுகிழமை. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நண்பரை பார்க்க மயிலாப்பூர் சென்றிருந்தோம். பரஸ்பர உரையாடல்களுக்கு பின் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்த இன்னொரு நண்பரை பார்த்துவிட்டு வரலாம் என முடிவுசெய்து, நண்பரோடு கிளம்பினோம். மயிலாப்பூர் லஸ்ஸிலிருந்து 12B யில் ஏறியாகிவிட்டது. ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகில் வந்தபோது நடத்துனர் "எல்டாம்ஸ் ரோடு போறவங்க எல்லாம் இங்கேயே இறங்கிக்குங்க. ஏதோ மீட்டிங் நடக்குதாம். வண்டி அந்த வழியாக போகாது" என்றதும் அங்கேயே இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

"மாப்பி! என்னாடா மீட்டிங்? போக்குவரத்து எல்லாம் தடை பண்ணி இருக்காங்க?"

"தெரியலை நண்பா.. ஏதாவது கட்சிகாரங்க வீட்டு கல்யாணமாக இருக்கும்" என பேசிக்கொண்டே நானும், நண்பரும் நடக்க ஆரம்பித்தோம்.

எல்டாம்ஸ் ரோட்டின் துவக்கத்திலேயே சாலையின் குறுக்கே தடுப்பு கட்டைகள் வைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எமதர்மராஜா போல் மீசையும், நிறைமாத கர்ப்பிணி பெண்போல் தொப்பையையும் வைத்திருந்த ஒரு காவல் அதிகாரி அதன் அருகிலேயே நின்றவாறு அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

எங்கள் இருவரையும் பார்த்ததும் "தம்பி! எங்கே போறீங்க?" என மிரட்ட, இதோ இங்கேதான் ஸார்.. இந்த பேங்க்குக்கு பின்னால நண்பரோட அறைக்கு போகனும்" என்றோம் பயத்துடன்.

"அங்கே இன்னைக்கு மீட்டிங் நடக்குது. இந்தவழியா போகக்கூடாதுன்னு தெரியாது?" என்றார் அதே மிரட்டும் தொணியில்.

"இல்லை ஸார்.. கொஞ்சம் விட்டிங்கன்னா அப்படியே ஓரமாகவே போய்டுவோம். ப்ளீஸ் ஸார்"

"சரி.. சரி.. சீக்கிரம் போங்க" என்று பெரிய மனதுடன் எங்களை அனுமதித்தார்.

சாலையில் நுழைந்தவுடன் ஒரு பெரிய கட் அவுட் ஒன்று எங்களை வரவேற்றது. கட் அவுட்டில் ஒரு இளைஞர்(?) இருகரம் கூப்பியபடியே சிரித்துக் கொண்டிருந்தார்.

"யார் மாப்பி இது? புதுசா இருக்கார்?" என்ற நண்பரிடம்,

"தெரியலை நண்பா.. ஆனால் எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு..ஆங் எங்கேன்னுதான் தெரியலை" என்றவாறே தொடர்ந்து நடந்தோம்.

"சரி.. நம்ம்க்கென்ன மாப்பி! வந்தவேலையை பார்ப்போம். சீக்கிரம் போகலாம் வா"

இதற்குள் அந்த கல்யாண மண்டபத்தை நெருங்கியிருந்தோம். மண்டப வாசலில் குழுமியிருந்த சிலர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து மண்டபத்தினுள் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர். சாலையில் நடந்து செல்வோரையும் விடவில்லை.

"என்னா மாப்பி! புதுசா இருக்கு.. சாலையில் போறவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறாங்க.. ஒருவேளை ஏதாவது கட்சிக்கு ஆள் சேர்க்கறாங்களோ?"

"எதுவாயிருந்தா நமக்கென்ன நண்பா.. நம்ம வந்த வேலையை பார்ப்போம் வா" என்றபடியே வேகமாக நடந்தோம். அப்போதுதான் அந்த கும்பலில் நின்றிருந்த அந்த நபரைப் பார்த்தோம்.

"அய்யய்யோ! இவரா.. " என அதிர்ந்தபடியே, "நண்பா! வா இப்படியே திரும்பி போயிடுவோம்" என்றோம் அவசரமாக.

"என்னா மாப்பி! இவ்வளவு தூரம் வந்துட்டு திரும்பி போகலாம்கிறே.. அங்கே அந்த போலீஸ்கார மாமா பார்த்தா அடிப்பாரே"

"அவர் அடிச்சா கூட பரவாயில்லே நண்பா.. இவங்ககிட்ட மாட்டினேன்னு வை.. அவ்வளவுதான்"

"என்ன மாப்பி சொல்றே? இவங்களை உனக்கு முன்னமே தெரியுமா?"

"ஆமா நண்பா.. போனவாரம் காந்திசிலை பக்கத்திலே மாட்டினேன்னு சொன்னேன்ல. அது இந்த குரூப்தான்பா.. அப்பவே சொன்னாங்க இந்தவாரம் இங்கே சந்திச்சு கும்மியடிக்கலாம்னு.. நான்தான் மறந்துபோய் இந்தபக்கம் வந்துட்டேன்பா"

"அப்புறம் கட்அவுட்லே பார்த்தோம்ல அவர் கூட யாருன்னு இப்போ ஞாபகம் வந்துடுச்சு. அவர்தான் நண்பா டோண்டு ராகவன் ஸார். போனவாரம் கும்மியடிச்ச கூட்டத்திலே அவரும்தான் இருந்தாரு"

"அப்படியா மாப்பி! சரி வா திரும்பிடலாம்" என்ற நண்பனுடன் கிளம்பியபோது அந்த கூட்டத்தில் தலைபோல் நின்றிருந்த பாலபாரதி எங்களை பார்த்துவிட்டார்.

"தம்பி! நீங்களா தம்பி வாங்கவாங்க.. பரவாயில்லையே சொன்னமாதிரியே வந்துட்டிங்களே.." என்றபடியே வேகமாக எங்களிடம் வந்தார்.

"இன்னும் சந்திப்பு ஆரம்பிக்கலை தம்பி! சரியான நேரத்திற்குதான் வந்திருக்கிங்க. வாங்க உள்ளே போகலாம்"

"சரி.. இனி கடவுள் விட்டவழி" என்றவாறே அவருடன் நடக்க ஆரம்பித்தோம்.

உள்ளே நுழைந்து பார்த்தபோது அந்த மண்டபமே நிறைந்து காணப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி மைக் வைத்து ஒரு சட்டமன்ற கூட்டத்தொடர் ரேஞ்சுக்கு அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சிறிதுநேரத்தில் பாலபாரதி "எல்லாம் ரெடியாப்பா?" என்றதும் எங்கள் அருகிலிருந்த டாக்டர் புருனோ "ம்.. எல்லாம் தயாரா இருக்குங்க. இப்போதான் வந்தது" என்றார்.

எதைச் சொல்கிறார் என வெளியே எட்டிப்பார்த்தால் சிறப்பு மருத்துவர் குழுவுடன் இரண்டு ஆம்புலன்ஸ்களை வெளியில் நிறுத்தி வைத்திருந்தார்.

நண்பர் லக்கிலுக்கோ கழகத்தில் தனக்கு இருக்கும் பவரை பயன்படுத்தி கலைஞர் தொலைக்காட்சி குழுவினரை வரவழைத்து, நேரலைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஒருவழியாக கூட்டம் ஆரம்பித்தது. பரவலாக பதிவர்களிடமிருந்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து பதில் கிடைத்தது.
அதேபோல் பதிவர்கள் கூறிய குறைகளையும் கவனமாக கேட்டுக்கொண்டனர். நமது அருகில் இருந்த லக்கிலுக்கோ அமைதியாகவே இருந்தார்.

பாலபாரதி எங்களை நோக்கி வேகமாக வரவும், போச்சுடா நம்மை ஏதாவது கேட்க சொல்வாரோ? என பயத்துடன் பார்த்தோம். நல்லவேளையாக லக்கிலுக்கை பார்த்து "ஏதாவது கேளுப்பா. சும்மாவே உட்கார்ந்திருக்கே" என்றதும், லக்கிலுக் "வேணாம் தலை.. வேணாம் விடுங்க.. அப்புறம் நான் ஏதாவது எசகுபிசகா கேட்டுடுவேன். என்றார்.

"அப்படி என்னதான் கேட்கிறேன்னு பார்க்கலாம். கேளுய்யா" என்றார் பாலபாரதி.

எழுந்த லக்கிலுக் நிர்வாகிகளை பார்த்து "தமிழ்மணம்னு சொல்றீங்க. தளத்தை திறந்தால் மணமே வரலையே ஏன்?" என்றதும், தமிழ்மண நிர்வாகிகள் பதில்தெரியாமல் பரிதாபமாக பார்த்தனர்.

இதற்கிடையே சிற்றுண்டி இடைவேளை விடப்பட, கிடைத்த இடைவெளியில் பதுங்கி பதுங்கி வெளியேறினோம்.

சந்திப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
பி.கு: வழக்கம்போல் ஒரு மொக்கைபதிவு. சந்திப்பு முடிந்தபின்னர் விரிவாக எழுதுகிறோம்.

சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..02

எங்களுக்கோ மிகவும் எதிர்பார்த்து வந்த உண்மைதமிழன் அண்ணாச்சி ஆப்செண்ட் ஆனது குறித்து கவலையாக இருந்தது.

கும்மியடிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதிஷா எழுந்து கைப்பேசியில் இருந்த கேமராவில் அனைவரையும் படமெடுக்க ஆரம்பித்தார்.அவர் ஒவ்வொருவரையும் போகஸ் செய்து புகைப்படம் எடுக்கும் விதத்தை பார்க்கும்போது சந்திப்பு முடிந்தவுடன் அப்படியே அருகிலிருக்கும் ஐஜி ஆபிஸில் கமிஷனரிடம் எல்லோரது புகைப்படங்களையும் கொடுத்து வாண்டட்(wanted) லிஸ்டில் சேர்த்துக்கொள்ள சொல்வாரோ என தோன்றியது.அதிஷாவை தொடர்ந்து பாஸ்டன் பாலாவின் நண்பர் மூர்த்தியும் டிஜிட்டல் கேமராவில் சுற்றிவந்து அனைவரையும் புகைப்படம் எடுத்து தான் அதிஷாவுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார்.ஒருவழியாக சந்திப்பின் கருப்பொருளான அடுத்தவாரம் நடைபெறப்போகும் தமிழ்மண நிர்வாகிகளுடனான சந்திப்பில் பதிவர்கள் சார்பாக வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்டன் பாலாவும் அவர் சார்பில் த்மது கருத்துக்களை வலியுறுத்தினார்.இதனிடையே இடைப்புகுந்த வளர்மதி மற்றும் ஜ்யோவராம் சுந்தர் ஆகியோர் தமிழ்மணத்தில் தாங்கள் எதிர்கொண்ட வகைப்படுத்துதல் பிரச்சினைகளை பற்றிச் சொல்ல, பாலபாரதி குறித்துக்கொண்டார்.அடுத்து சந்திப்பின் மைய பிரச்சினையான உண்மைதமிழன் பின்னூட்ட பிரச்சினை குறித்தும், மீண்டும் பின்னூட்ட உயரெல்லை கொண்டுவருவது பற்றியும் பேச்சு திரும்பியது. அதுபற்றி எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்த வாரம் தமிழ்மண சந்திப்பின்போது காண்க.

பின்னர் பேச்சு வலைப்பக்கங்கள் தற்போது எதிகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முக்கியமாக ஆபாச பின்னூட்டங்கள், ஆபாச தலைப்புகள் குறித்து திரும்பியது. 7:15 மணி வாக்கில் சில பதிவர்கள் கிளம்ப, மீதமிருந்த பதிவர்களுடன் பாஸ்டன் பாலா உரையாடினார். மேலும் அரைமணி கழிந்தபின்னர் பாலபாரதி சபையை கலைக்கலாமா என கேட்க, ஒருவழியாக சந்திப்பு இனிதேமுடிந்தது.அங்கிருந்து கலைந்து அருகிலிருந்த தேநீர் விடுதியில் சூடான தேநீர் விருந்து முடிவில் அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றோம்.

இந்த பதிவர் சந்திப்பில் முதல் முறையாக கலந்து கொண்டதில் இருந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அல்லது இனிவரும் சந்திப்புகளில் புதிதாக கலந்துகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை:

சந்திப்புக்கு 2 நாள் முன்னே ஏதாவது ஒரு பதிவு போட்டுவிட்டு செல்லவும்.செமஸ்டர்ல ஓவர்நைட் படித்து எழுதுவதுபோல் தமிழ்மண உதவியுடன் முடிந்த அளவுக்கு எல்லா பதிவுகளையும் மேலோட்டமாகவாவது படித்துவிடவும். அங்கே கல்ந்துரையாடலின்போது நிச்சயம் உதவும்.

சரி ஒரே மொக்கையா போய்க்கிட்டிருக்கு. கொஞ்சம் சீரியஸா பேசுவோம்.

இது எங்களுக்கு முதல் சந்திப்பு என்றபோதும் புதியபதிவர் என வித்தியாசம் காட்டாமல் அவர்களில் ஒருவராக பாவித்து தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திய லக்கிலுக், பாலபாரதி, முரளிகண்ணன், அதிஷா ஆகியோர்.

இதுவரை ஒன்றுகூட உருப்படியாக எழுதவில்லை என்றபோதும்கூட, நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க என ஊக்கப்படுத்திய டோண்டு ஸார், பாலபாரதி.

இந்தவாரம்தான் நீங்க ஒன்றுமே பேசலை. அடுத்தவாரம் வந்து பேசலை தொலைச்சிடுவேன் என அன்பாக மிரட்டிய பாலபாரதி.

இறுதியில் சரி ஒருதடவை போய்தான் பார்ப்போமே என்ற முடிவில் சென்ற பதிவர் சந்திப்பு இனி ஒவ்வொரு முறையும் தவறாமல் செல்லவேண்டும் என தோன்றும் அளவுக்கு நடந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தபோதும் விடைபெறும்போது ஏதோ நீண்ட நாள் நண்பர்களை பார்த்துவிட்டு திரும்பும் உணர்வு மனதில் அருந்திய தேநீரை விடவும் சுவையாய் இருந்தது.ஒரு சுய விளக்கம்:

இந்த பதிவர் சந்திப்புக்கு வரும்வரை எனக்கும் அதிஷாவுக்கும் அறிமுகமே கிடையாது. முந்தைய நாள் எதேச்சையாக வலைப்பக்கத்தில் பார்த்த எண்ணில் தொடர்புகொண்டஅனுபவம் மட்டுமே. மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை.அவரது பெயர்கூட சந்திப்பின் போதுதான் தெரியும்.(எங்கள் இருவரையும் வைத்து கொண்டை முடியும் இருவருக்காக இந்த விளக்கம்)


இந்தவார குட்டு:

பதிவர் சந்திப்பு சென்னையிலே, அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு மாலை நடந்தும்கூட தவிர்க்க இயலாத காரணங்களால் வரமுடியாதவர்களை தவிர்த்து, வராமலிருந்த மற்றவர்களுக்கு


இந்தவார பூச்செண்டு:


இப்படியொரு அருமையான சந்திப்பை ஏற்பாடு செய்த பாலபாரதிக்கும், ஏற்பாடு செய்யவைத்த பாஸ்டன் பாலாவுக்கும்.

வெளிநாட்டிலிருந்து வந்தாலும் கூட நம்ம ஊரில் சில பார்ட்டிகள் காட்டுவதுபோல் சீன் போடாமல் மாநகர போக்குவரத்து கழக பேருந்திலேயே வந்து திரும்பிய பாஸ்டன் பாலாவுக்கு.

இந்தவார கேள்வி:

சிறந்த படைப்பாளரான கென் கடைசிவரை எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தது ஏனோ?

விடுபட்டவை:

விவாதத்தின்போது டோண்டு ஸார் ஜ்யோவ்ராம் சுந்தரிடம் அவரது சமீபத்திய பதிவான காமகதைகள் பற்றி ஆர்வமாக கேட்டது.

அரசாங்கம் பட விமர்சனத்தின்போது கேப்டனின் இங்லீஷ் பேசும் ஸ்டைலை கிண்டல் செய்து, லக்கிலுக் தன்னை திமுக் ஆதரளவாளர் என மீண்டும் ஒருமுறை காட்டிக்கொண்டது.


பி.கு: சந்திப்பு குறித்து நேற்று போட்ட பதிவு வலையேற்றத்தின்போது நடந்த சிக்கலால் எங்கோ மறைந்துவிட, இன்னும் கொஞ்சம் மேட்டர் சேர்த்து பழைய பதிவை நீக்கிவிட்டு இதை பதித்துள்ளோம்.

சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..01

எங்களது முதல் பதிவர் சந்திப்பு. அற்புதமான ஒரு ஞாயிற்றுகிழமை மாலைநேரம்.காந்திசிலை பின்புறம் இருந்த திறந்தவெளி. மாலைநேரம் சிலுசிலுவென வீசிய காற்றில் வரவிருந்த மழைகூட சந்திப்புக்காக கூடியிருந்த பதிவர்களை பார்த்து பயந்து வராமலேயே போய்விட்டது.

இப்படி ஆரம்பிக்க்லாம்னு தயார் செய்துகொண்டு இருக்கும்போதே அதிஷாவும், டோண்டு ஸாரும் நடந்ததை எல்லாம் எழுதிட்டாங்க. சரி நம்ம பங்குக்கு இதோ. என்ன பண்றது


முதல்முறையாக பதிவர் சந்திப்புக்கு போனதால் உங்கள் சமீபத்திய பதிவு என்னங்க? என்ற ரீதியில் கேள்விகளை தவிர்க்க சனிக்கிழமை காலையே இந்த பதிவர் சந்திப்பு குறித்து முன்னதாக போட்ட பதிவுக்கு(இரு பதிவுகளையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்) வந்த பின்னூட்டங்களின் மிரட்டல்களால் சற்றே பீதியடைந்திருந்தாலும் கூட, சரி என்னதான் நடக்குதுன்னு போய்தான் பார்போமே என முடிவுசெய்து கிளம்பிப்போனோம்.

அண்ணன் லக்கிலுக், அதிஷா, மற்றும் உண்மைதமிழன் ஆகியோர் அன்பாக(?) சிறப்பு அழைப்பு விடுத்திருந்தபடியால் சற்றே முன்னெச்சரிக்கையுடன் சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு(ஒரு பாதுகாப்புக்குதான்:)) அரைமணி முன்னதாகவே காந்திசிலையை அடைந்தோம். சரியாக எந்த இடமென தெரியாததால் வலையுலகின் ஒரேநண்பரான(சந்திப்புக்கு முன்) அதிஷாவை செல்லிடபேசியில் பிடித்தோம்.

"அதிஷா ஜிங்காரோ பேசறேங்க"

"சொல்லுங்க ஜிங்காரோ. எங்கே இருக்கீங்க?"

"இங்கே காந்திசிலை பக்கத்திலேதாங்க இருக்கேன். எங்கே சந்திப்பு நடக்குதுன்னு தெரியலீங்க"

"காந்திசிலைக்கு பின்னாடி பாருங்க. யாராவது 10 பேர் கூட்டமா உட்கார்ந்திருக்காங்களா?"

"அட ஆமாங்க அதிஷா இங்கே ஒரு குரூப் உட்கார்ந்திருக்காங்க"

"அதிலே ஒரு 4 பேர் சீரியஸா விவாதிச்சுக்கிட்டு இருப்பாங்க. ஒரு 4 பேர் அவங்க வாயையே பார்த்துக்கிட்டிருப்பாங்க. ஒரு 2 பேர் கடந்துபோற மகளிரணியை சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்களா?"

"அதிஷா எப்படிங்க இவ்வளவு சரியா சொல்றீங்க?நீங்களும் என் பக்கத்திலேதான் எங்கேயாவது நின்னு பேசறீங்களோ" என்றோம் சுற்றும்முற்றும் பார்த்தபடியே சந்தேகத்தோடு.

"இத்தனை மாச அனுபவத்திலே எத்தனை சந்திப்பை பார்த்திருப்பேன்" என்ற அதிஷாவிடம்

சரி சரி அடங்குங்க என மனதுக்குள் நினைத்தவாறே "சரிங்க அதிஷா நாங்களும் போய் இப்போதே அந்த ஜோதியில் ஐக்கியமாகிடுறோம். சீக்கிரம் வாங்க" என்றபடியே கைப்பேசியை இணைப்பை துண்டித்தேன்.

உடன்வந்த நண்பர்களிடம் "மாப்பிஸ்! இதுதான் ஸ்பாட். ஆளுக்கொரு மூலையில் போய் நின்னுக்குங்க. பார்வை மட்டும் எங்க மேலேயே இருக்கட்டும். ஏதாவது பிரச்சினைன்னா சிக்னல் காட்டுறோம் ஆஜராகிடுங்க" என்றபடியே நாங்கள் மட்டும் தனியாக ஒரு ஜம்ப் செய்து அந்த நீரில்லாத குளத்தில் குதித்தோம்.

கொஞ்சம் வேகமாக குதிச்சுட்டேன்னு நினைக்கிறோம். அங்கே கூட்டமாக உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தஅந்த நண்பர்கள் அனைவரும் ஒருநொடி திகிலடைந்து பேச்சை நிறுத்தி எங்களைப் பார்த்தனர்.

அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் "அண்ணே! இங்கே பதிவர் சந்திப்பு நடக்குதுன்னாங்களே.. " என வினவ, பதிலுக்கு அவரோ காந்திசிலையை கைகாட்டி வாய்க்குள்ளேயே ஏதோ பேசினார். எங்களுக்கு ஒன்றுமே கேட்காமல் மீண்டும் வினவ, அதேபதில். சரி.. ஏதோ சொல்லவராரு. நிச்சயமாக இங்கே இல்லன்னு மட்டும் சொல்லலை என உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து வெளியேறி சில் அடிகள் தொலைவிலேயே அமர்ந்தபடி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தோம்.(மெய்காவலர் துணையுடன்)

சில நிமிடங்களிலேயே அந்த குரூப் கலைந்துசென்றது. இப்போது இடம் காலி. ஆனால் பதிவர்கள்தான் ஒருவரையும் காணோம். என்னடா இது வம்பா போச்சு. ஒருவேளை ஓவர்நைட்ல கண்ணகி சிலையை ஆட்டையை போட்டமாதிரி ஒருவேளை காந்திசிலையையும் இடம் மாத்தி இருப்பாங்களோ? என்ற சந்தேகத்துடன் மீண்டும் ஒருமுறை சிலைப்பக்கம் சென்று அவர் அண்ணல் காந்திதான் என உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பினோம்.

இப்போது அந்த இடத்தில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவரையும் பார்த்த ஞாபகமே இல்லை(என்னமோ இதுக்கு முன்னால எல்லா வலைப்பதிவர் சந்திப்புக்கு போய் எல்லோரோடயும் அறிமுகம் ரேஞ்சுக்கு பேசாதீங்க என யாரோ முணுமுணுப்பது கேட்கிறது) ஆனால் சற்றே உற்று கவனித்ததில் ஒரே ஒரு இளைஞரை மட்டும் எங்கேயோ பார்த்த நினைவு. ஆங்..கடைசியில் ஞாபகம் வந்துவிட்டது. அண்ணன் லக்கிலுக்தான் அது. ஏதோ ஒரு வலைப்பக்கத்தில் புகைப்படம் பார்த்த நினைவு.இருந்தாலும் ஒரு அவர்தானோ என ஒரு தயக்கம்.உடனிருந்த மெய் காப்பாளரோ "மாப்பி! உங்ககூட நாங்க வந்திருக்கிற விஷயம் லீகவுட் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்.அதான் எல்லாம் எஸ்ஸாகிட்டாங்க போல. அப்போ நம்ம கிளம்பலாமா?" என நச்சரிக்க ஆரம்பித்தார்.

"இல்லை நண்பா..அங்கே உட்கார்ந்திருக்கிற குரூப்பை பார்த்தா இவங்கதானோன்னு சந்தேகமா இருக்கு. அதுவும் அந்த ஊதாகலர் டீஷர்ட் பார்ட்டி. வலைப்பதிவர்தான் சந்தேகமே இல்லை."

"சரி அப்போ போய் கலந்துக்குங்க. நேரமா வீட்டுக்கு போவோம்"

"இல்ல நண்பா. இன்னும் கொஞ்சநேரம் வெயிட் பண்ணுவோம்." என சொல்லிக் கொண்டிருக்கும்போதே வலையுலகின் நவரச நாயகர் அய்யா டோண்டு ராகவன்(சத்தியமா லக்கிலுக் இப்படி எழுத சொல்லலீங்க) காந்திசிலையை கடந்து வேகமாக வந்து் கொண்டிருந்தார்.

அவரைப்பார்த்ததும் நாங்கள் "நண்பா! இவங்கதாண்டா பதிவர்கள். உறுதியாகிடுச்சு" என்றோம்.

"எப்படி மாப்பிஸ்! அவ்வளவு உறுதியா சொல்றே?"

"அதோ அங்கே வரார் பார் ஒரு இளைஞர்:) அவர்தான் டோண்டு ராகவன் ஸார். அவர் இல்லாமல் சென்னையிலே எந்த சந்திப்புமே நடக்காது. அதான் சொல்றோம்"

"அதுசரி அவர்தான் டோண்டுராகவன் ஸார்னு எப்படி சொல்றீங்க?"

"அட ஆமாப்பா.. அவர் போடுற ஒவ்வொரு பின்னூட்டத்திலேயும் காந்திதாத்தா ஸ்டாம்ப் சைஸீக்கு அவர் புகைப்படம் வந்துக்கிட்டே இருக்கும்ப்பா. நிறைய தடவை பார்த்திருக்கோம்"

"அப்போ சரி மாப்பி"

"சரி நண்பா! ஆரம்பிச்சுடுவாங்க போல. நான் போறேன். ஏதாவது பிரச்சினைன்னா மட்டும் வந்து ஆஜராகிடு. மறந்துடாதே" என்றவாறே மறுபடியும் போய் களத்தில் குதித்தோம்.

முன்னர் வினவியபோது காந்திசிலையை கைகாட்டிய அதேநபர்(மன்னிக்கவும் பெயர் மறந்துவிட்டது) இந்த குரூப்பிலும் இருந்தார். மீண்டும் ஆவேசமாய் களத்தில் குதித்து ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்னத்தோடு நெருங்கிய எங்களைப் பார்த்த அந்த நண்பர் "இதோ இவங்க முதலிலேயே வந்து தேடிக்கிட்டிருந்தாங்க" என அறிமுகப்படுத்த சற்றே அமைதியாகி ஒரு புன்சிரிப்போடு களமிறங்கினோம்.

நமது பெயரை ஜிங்காரோ என அறிமுகப்படுத்திக் கொண்டதுமே அங்கிருந்தோர் கண்களில் அப்படி ஒரு ஆர்வம்(இருக்காதா பின்னே!2 நாளாக தேடிக்கிட்டு இருக்காங்களே...). சற்றே பயத்துடன் அங்கே அமர்ந்தோம்.

மெய்காப்பாளரை திரும்பிப்பார்த்தால் அவரது பார்வையோ கடந்துசென்ற ஒரு பெண்ணை தொடர்ந்து கொண்டிருந்தது. சரி இன்னைக்கு நேரம் சரியில்லை என்றவாறே நிமிர்ந்து பார்த்தேன்.

"எங்கேங்க அதிஷா" என்ற லக்கிலுக்கிடம் "வந்துக்கிட்டே இருக்கார்" என்றதும் ஏதோ அர்த்தத்தோடு சிரித்தார்.(சத்திய்மாக எதற்கு என தெரியவில்லை)

இவ்வளவு நேரமும் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி கையில் துடைத்துக் கொண்டிருந்த அந்த நண்பர் என்னை தீர்க்கமாக ஒருமுறை பார்த்தார். ஆஹா! இப்படி பார்க்கிறாரே.. ஒருவேளை இவருதான் உண்மைதமிழனா இருப்பாரோ என பயத்துடன் பார்த்தோம்.

"ஏங்கப்பா என்மேல் இந்த கொலைவெறி உங்களுக்கு? என்றார் ஆவேசத்துடன்.

ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. என நினைத்தவாறே நமது மெய்காப்பாளரை பார்க்க, அவரோ வெகுதூரத்தில் கடற்கரை மணலில் மகளிரணி பின் சென்று கொண்டிருந்தார்.

"விடு ஜிங்காரோ இந்த சிச்சுவேஷன் நமக்கெல்லலாம் புதுசா என்ன? சமாளிப்போம்" என மனதுக்குள் பேசியபடியே ஆவேசப்பட்ட அந்த நண்பரை பார்த்தோம்.

"அண்ணே! நீங்கதான் உண்மைதமிழனா?இல்லேன்னா நீங்க யாரு?"

"யோவ்! நான் பாலபாரதிய்யா.. என்னைப்பார்த்து பதிவர் சந்திப்புல நீங்க யாருன்னு கேட்ட முதல் ஆள் நீங்கதாண்டா.. உங்களை நான் தனியா கவனிச்சுக்கறேன்." என போக்கிரி பட விஜய் ரேஞ்சுக்கு பஞ்ச் டயலாக் அடிக்க ஆரம்பித்தார்.

"ஆஹா! இன்னைக்கு ராசிபலன் படிக்காம வந்தது ரொம்ப தப்போ?" என நினைத்தபடியே அமர்ந்திருந்தோம்.

"அது என்னங்க பேரு ஜிங்காரோ ஜமீன்?" என லக்கிலுக் கேட்டார்.

"ஆஹா! எங்கள் ஆருயிர் அண்ணன் ஜமீனின் புகழ்பாட இப்போதாவது நேரம் கிடைத்ததே" என சொல்ல முயற்சிக்கும்போதே மீண்டும் குறுக்கிட்ட லக்கிலுக் "சரியான மொக்கை சரக்குங்க அது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

(நல்லவேளை ஜமீன் அங்கே இல்லை. இல்லேன்னா ரணகளமாகியிருக்கும் ஆமா..)

இதற்கிடையே நவரச நாயகர் டோண்டு எழுந்து ஒவ்வொருவரிடமும் அறிமுகப் படலத்தை ஆரம்பித்தார். என்முறை வந்ததும் ஜிங்காரோ என்றதும் "யெஸ்.. யெஸ் உங்க பதிவுகள் எல்லாம் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க" என்றார்.

என்னடா வந்தவுடனே இப்படி கலாய்க்கிறார். ஒருவேளை இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ? என நினைத்தபடியே அமர்ந்திருந்தோம்.

"உங்க சமீபத்திய பதிவு என்ன?" என தொடர்ந்தார் டோண்டு.

இப்படி கேட்பாங்கன்னு தெரிஞ்சுதான் சனிக்கிழமையே போட்ட பதிவர் சந்திப்பு பதிவைப்பற்றி கூறினோம்.

"கரெக்ட். படிச்சேன். படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.. பின்னூட்டம் கூட போட்டேனே" என்றார் டோண்டு ஆர்வமுடன்.

படிச்சுட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கார் என சந்தேகத்துடனே "இருக்கலாம் ஸார்.. நாங்க சரியா பார்க்கலை" (ஒருவேளை பின்னூட்டம் போட்டிருந்தீங்கண்ணா கூட அண்ணன் உண்மைதமிழன் பின்னூட்ட வேகத்தில் உங்களது சிக்கியிருக்கும்) என வழிந்தோம்.

எப்படிடா தப்பிக்கலாம் என்ற யோசனையிலேயே அமர்ந்திருந்த எனக்கு வருணபகவான் கைகொடுத்தார். சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டுமே பெய்யும் மழை அன்று எதிர்பாராமல் பொழிய ஆரம்பித்தது. ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓட, நாங்களும் அங்கிருந்து எகிறினோம்.

கண்ணை மூடிக்கொண்டு மூச்சிரைக்க ஒரு 50 மீட்டர் தூரம் ஓடி, ஒரு மரத்துக்கு அடியில் ஒதுங்கியிருந்த கூட்டத்தில் கலந்து, பதுங்கியவாறே அப்பாடா ஒருவழியாக தப்பித்தோமடா சாமி என்றவாறே திரும்பிப்பார்த்தால் லக்கிலுக், முரளிக்கண்ணன், டாக்டர் புருனோ நம்மைச்சுற்றி ரவுண்ட் கட்டி நின்றிருந்தனர். ம்ஹீம்.. அண்ணாத்தேல்லாம் ஒரு முடிவோடத்தான் இன்றைக்கு வந்திருக்காங்க என நினைத்தபடியே கலங்கியபடி நின்றிருந்தோம்.

இதற்குள் பாலபாரதி யாருக்கோ கைப்பேசியில் அழைப்புவிட, நமக்கோ வடிவேல் காமெடியில் வரும் "மாப்பி! இங்கே ஒருத்தன் தனியா வந்து மாட்டி இருக்காண்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு நினைக்கிறேன். நீயும் கொஞ்சம் வந்து கவனிச்சுட்டு போ" என்ற வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தது.

எதிர்பார்த்தது போலவே சில நிமிடங்களில் மழையோடு மழையாக அந்த நண்பரும் வந்து இணைந்துகொண்டார். அவர்தான் புது மாப்பிள்ளை சுகுணாதிவாகர் என்பது பின்னர் தெரிந்தது. இந்த குரூப்பில் ஒரு நண்பர் மட்டும் அடிக்கடி நம்மை திரும்பி பார்த்தபடியே இருந்தார்.

சரி.. வந்ததுக்கு பெயரையாவது கேட்போம் என "நீங்க ஸார்" என்றோம்.

"நான்தான் ஸார் அதிஷா" என்றார் சிரிப்புடன்.

"அப்படிங்களா" என்றோம் மிகவும் சந்தோஷத்தோடு. (பின்னே இருக்காதா முதல்நாள்தான் எங்களுக்கும் அவருக்கும் அறிமுகம். அதுவும் கைப்பேசியில் மட்டுமே பேசியிருக்கிறோம். முதன்முதலாக நேரில் பார்த்தவுடன் வரும் சந்தோஷம்தான்) :)

ஒருவழியாக மழைநிற்க, எல்லா கைப்பேசிகளையும் ஆட்டையை போட்டு :) கடல்பக்கம் சென்ற டோண்டுவை தேடி ஒரு குழு பயணித்தது.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று ஒரு குழு விவாதித்துக் கொண்டிருக்கும்போதே விழாநாயகன் பாஸ்டன் பாலா வந்தார். உடன் அவரது நண்பரும்.

ஏற்கனவே வலைப்பக்கத்தில் புகைப்படத்தை பார்த்திருந்தாலும் கூட நேரில் இன்னும் இளமையாகவே இருந்தார். ஒருவழியாக டோண்டு ஸாரை கண்டுபிடித்து கூட்டிவந்து, அங்கங்கே சிறுசிறு குழுக்களாக கூடி கும்மி அடித்தவர்களையும் தேடிப்பிடித்து ஒரேஇடத்தில் அமரவைத்து இப்போ கும்மியடிக்க ரெடியா? என்றபடியே மாலை 6 மணிக்கு இனிதே சந்திப்பு துவங்கியது.

டோண்டு ஸார் பாஸ்டன் பாலாவின் அருகில் அமர்ந்துகொண்டார். நிறைய புது பதிவர்கள் வந்திருப்பதால் ஒரு சிறிய அறிமுகபடலம் துவங்கியது. அதன்முடிவில் நாங்கள் அறிந்துகொண்டவை.

அந்த சந்திப்புக்கு வந்திருந்தோர் விழா நாயகன் பாஸ்டன் பாலா, அவர் நண்பர் மூர்த்தி, டோண்டு ராகவன், பாலபாரதி, மருத்துவர் ப்ரூனோ, லக்கிலுக், முரளிகண்ணன், சுகுணா திவாகர், விக்கி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, வழக்கறிஞர் சுந்தரராஜன், அதிஷா, ஜோதிவேல், பைத்தியக்காரன், கடலையூர் செல்வம், கென், ஒரு பெண்பதிவர் லட்சுமி இவர்களோடு நாங்களும் (விடுபட்டவர்கள் மன்னிக்க. முதல் சந்திப்பு இது. அதனால் தவறுகள் இருக்கலாம்)

அறிமுகப்படலம் முடிந்ததும் பாஸ்டன் பாலாவின் நண்பர் ஜோல்னா பையிலிருந்து நொறுக்கு தீனிகளை(உபயம்: பாஸ்டன் பாலா) வெளியே எடுத்து அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தார்.

ஒரே ஒரு முறுக்கு, ஒரே ஒரு பருப்புவில்லை, ஒரே ஒரு இனிப்பு(நிசமாவே அவ்வளவுதாங்க) எடுத்துக்கொண்ட நாங்கள் சாப்பிட்டுகொண்டே கும்மியடிக்க ஆரம்பித்தோம்.

இனிப்பு, காரம் சுவையாக இருந்ததால் அடுத்த ரவுண்டை எதிர்பார்த்து காத்திருக்க, வரவேயில்லை.

கொஞ்சம் எட்டிப்பார்த்த பின்னர்தான் டோண்டு ஸார் பாஸ்டன் பாலாவின் அருகிலேயே அமர்ந்ததற்கான காரணம் புரிந்தது.(இன்னமும் புரியாதவர்கள் அடுத்த சந்திப்புக்கு வரும்போது எங்களிடம் நேரில் கேட்டுக்கொள்ளவும்) :)

இன்னும் இருக்கு....

சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..02

(தொடரும்)

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு(8-6-08)

எங்களுக்கு முதல் வலைப்பதிவர் சந்திப்பு என்பதால் சற்று தயக்கத்துடனேயே போனோம். தொடங்கும்நேரம் என குறிப்பிட்டிருந்த 5:45க்கு அரைமணி முன்னதாகவே சென்றடைந்தோம்.

நம்ம நேரமோ என்னவோ தெரியலை. மெரினாவில் காந்தி சிலை அருகில் ஞாயிற்றுகிழமை வழக்கமாக இருக்கும் கூட்டம்கூட அன்று இல்லை. ஒரு 10 நிமிட காத்திருப்புக்கு பின் திருதிருவென விழித்தவாறே இருவர் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தனர். ஒருவேளை ஏற்பாடு செய்த வலைப்பதிவராக இருக்குமோ என எண்ணும் நேரத்தில் அவர்களது செயல்படு வித்தியாசமாக இருந்தது. மெரினாவில் காற்றுவாங்க வந்தோர், நடைபயணம் மேற்கொண்டோ ர் என ஒருவரையும் விடாமல் நெருங்கிபோய் ஏதோ கேட்பதும் அவர்கள் மறுத்தவாறே விலகிச் செல்வதுமாய் இருந்தனர்.

திட்டமிட்டபடி வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமா? என எங்களுக்கு சந்தேகமாக இருந்தது. மணி 5:30ஐ தொட்டிருந்த நேரம். சரி ஒருமுறை அவர்களை கேட்டுப்பார்த்துவிட்டு கிளம்பலாம் என நினைத்த நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுமே எங்களிடத்தில் வந்தனர்.

அதில் ஒருவர் "ஸார்! ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" என்றார்.

"என்ன ஸார் சொல்லுங்க!"
"நீங்க ஸ்டூடண்ட்டா ஸார்"
"இல்லை பொட்டி தட்டுற வேலையிலே இருக்கோம். ஏன் கேட்கறீங்க?"
"அப்பாடா.. மச்சான் நான் அப்பவே சொன்னேன்ல.. ஸாரை பார்த்தா பில்கேட்ஸ் தம்பி மாதிரியே இருக்காருன்னு(:))"
"என்ன ஸார் சொல்றீங்க ஒண்ணும் புரியலையே"
"விபரமாவே சொல்றோம் சார்.. நான் பாலபாரதி. இவரு பேர் முரளிகண்ணன். இண்டெர்னெட்லே நாங்க வலைப்பக்கம் தொடங்கி பதிவு எழுதறோம் ஸார். இன்னைக்கு இங்கே ஒரு சின்ன கூட்டம் ஏற்பாடாகியிருக்கு. எங்களை மாதிரி எழுதறவங்க எல்லாம் சந்திச்சு பேசறதுக்கு"
"அப்படிங்களா.. அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?"
"குறுக்கே பேசாதீங்க ஸார்.. அப்புறம் நான் என்ன சொல்ல வந்தேன்கிறதை மறந்துடுவேன்" என்ற பாலபாரதி கண்ணாடியை கழட்டி துடைத்து மாட்டியவாறே "ஆங்... ஞாபகம் வந்துடுச்சு சார்.. சிறப்பு விருந்தினரா பாஸ்டன் பாலான்னு அமெரிக்காலேருந்து ஒருத்தர் வர்ரார். அவர் வர நேரம் இன்னைக்குன்னு ஒருத்தரையும் காணோம். கூட்டமே சேரலை. தப்பா நினைச்சுக்கலேன்னா ஒரு 30 நிமிஷம் மீட்டிங்ல உட்கார்ந்துட்டு போகமுடியுமா ஸார்"

என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் பாலபாரதி.

"சரி ஸார். கலந்துக்கறோம் ஆனால் எங்களுக்கு வலைப்பூ பத்தி அவ்வளவாக பரிச்சயமில்லையே"

"அதெல்லாம் ஒண்ணும் கவலையே படாதீங்க ஸார். யார் என்ன கேட்டாலும் ஒரு புன்னகையை மட்டும் சிந்துங்க போதும். எதுவும் பேசவேண்டாம். மீதியெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்" என்றார் முரளிக்கண்ணன்.

"அதுவுமில்லாமல் போண்டா, டீ, சமயத்தில் செட்டு சேர்ந்தால் பானம் கூட உண்டு ஸார். மிஸ் பண்ணிடாதீங்க" என்றார் பாலபாரதி.

"இல்லை ஸார் அதுவந்து.."

"என்ன ஸார் தயங்குறீங்க அதோ அங்கே பாருங்க.. கடலையே வெறிச்சு பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காரே அவர் பேரு லக்கிலுக். சொந்தமாக வலைப்பக்கம் வைச்சிருக்காப்ல. மீட்டிங் முடிஞ்சதும் பார்ட்டி உண்டுன்னு கேள்விப்பட்டு காலையிலே 10 மணிக்கே வந்து உட்காந்திருக்காரு" என்றார் பாலபாரதி.

"ஓ அப்படியா ஸார். ஓ.கே ஸார் நாங்க இருக்கோம்"

ஒருவழியாக 5:௪௫ எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்த உண்மையான வலைப்பதிவர்கள் சிலருடன் நாங்களும் சேர்துக்கொள்ள, ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது.

திடீரென கூட்டத்தில் முணுமுணுப்பு.

என்னவென்று பார்த்தால் பாஸ்டன் பாலா வந்து கொண்டிருந்தார். பின்னாலேயே நம்ம டோண்டு ஸாரும்.
மீட்டிங் ஆரம்பித்து ஏதேதோ பேசினார்கள். நாங்களோ வாக்கு கொடுத்தபடியே புன்னகையை மட்டுமே சிந்திக் கொண்டிருந்தோம். மனமோ போண்டா, டீயை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.

ஒருவழியாக 6:10 மணிக்கு சிறிய இடைவேளை விட ஆவலோடு எதிர்பார்த்த போண்டா, டீ யும் வந்தது. ஆவலோடு சூடான போண்டாவை வாங்கி, பாக்கெட்டிலிருந்த தமிழ்முரசு பேப்பரில் வைத்து எண்ணையை பிழிந்து சாப்பிடலாமென ஆவலாக வாயருகே கொண்டு சென்றால் திடீரென பெரும் பரபரப்பு.

"சுனாமி வர்ரார்! சுனாமி வர்ரார்!" என்ற கூச்சல்.

எங்களுக்கோ போண்டா, டீக்கு ஆசைப்பட்டு இப்படி சுனாமிக்கிட்டே மாட்டிக்கிட்டோ மேடா. அப்பவே ஓடியிருந்தா தப்பிச்சிருக்கலாமே. இனிமேல் ஓடக்கூட முடியாதே! அட கல்யாணம், காச்சின்னு கூட இன்னும் ஒண்ணையும் அனுபவிக்கலையேப்பா.. நம்ம கதி அவ்வளவுதானா" என ஏதேதோ எண்ணி கலங்கியபடியே கடலை திரும்பி பார்த்தால் அமைதியாகவே இருந்தது.

குழப்பத்துடன் திரும்பினால் கண்ணாடி அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் வந்து கூட்டத்தில் ஐக்கியமானார். பக்கத்தில் இருந்த வலைப்பதிவர் உதவியுடன் அவரைத்தான் சுனாமி என அன்பாக அழைத்திருக்கிறார்கள் என்பது புரிவதற்குள் போண்டாவும், டீயும் நன்கு ஆறிப் போயிருந்தது.
நம்ம சுனாமி பார்ட்டி வந்தவுடன் கூட்டம் களைகட்ட தொடங்கியது.

"எதுக்குப்பா ஒரு பதிவிலே வந்து சுனாமி மாதிரி அவ்வளவு பின்னூட்டம் போடறே?" என்றார் டோ ண்டு ஸார்.

"அது ஒரு இன்ட்ரெஸ்டிங் ஸ்டோ ரி ஸார்" என்றார் வலையுலக சுனாமி என்றழைக்கப்பட்ட உண்மைதமிழன்.

"என்னப்பா சொல்றே"

"ஆமாம் ஸார்.. இப்போ தமிழ்மணம் முகப்பு மாத்தி புதுசா அமைச்சிருக்காங்கள்ல சார். அதனாலே புது முகப்பு மாத்தின நாளீலிருந்து 50 நாள் கழிச்சு யார் அதுவரைக்கும் அதிகமாக பின்னூட்டம் போட்டிருக்காங்களோ அவருக்கு சிறப்பு பரிசா மலேசியா, சிங்கப்பூர் கூட்டிக்கிட்டு போய் அங்கே வலைப்பதிவர் சந்திப்புலே கலந்துக்க வைப்பாங்களாம் ஸார்"

"அப்படியா உண்மைதமிழா! புதுசா இருக்கே? ஏப்பா பாலபாரதி உனக்கு ஏதாவது தெரியுமா?" என்கிறார் டோ ண்டு ஸார்.

"இல்லையே ஸார்"

"உனக்கு யாருப்பா இதெல்லாம் சொன்னாங்க"

"அதோ அவர்தான் ஸார். தனிமடல் அனுப்பி ரகசிய விஷயம்னு வேற சொன்னாரு" என இன்னமும் போண்டாவை தின்று கொண்டிருந்த லக்கிலுக்கை கைகாட்டுகிறார் உண்மைதமிழன்.

"என்னங்க லக்கிலுக்! இப்படி சொல்றாரு"

"ஸார் அன்னைக்கு ராத்திரி அதிசயமா சாட்டிலே வந்தாரு. சரி சும்மா பிட்டை போடுவோம். ரெண்டு நாள் கழிச்சு உண்மையை சொல்லிடுவோம்னு பிட்டை போட்டேன். ஆனால் அப்புறம் நானே மறந்துட்டேன். இப்போதான் ஸார் ஞாபகமே வருது. அதை உண்மைன்னு நம்பி இவர் இப்படியெல்லாம் செய்வார்னு எனக்கு தெரியாது ஸார்" என்கிறார் லக்கிலுக் பரிதாபமாக.

அதன்பின் ஆவேச கூச்சல்கள், குழப்பங்கள், விவாதங்கள் என ஒருவழியாக கூட்டம் இனிதே முடிவடைந்தது.

சரி பானம் அருந்த அழைத்து செல்வார்கள் என காத்திருக்க அனைவரும் சிறு சிறு குழுக்களாக கலைந்தனர். நம்மை ஒருவரும் கவனிக்கவில்லை. நமக்கோ கை கால் உதற ஆரம்பித்தது.

"ஏய்! நாங்க பாட்டுக்கு கம்முனுதான்யா இருந்தோம். நீங்கதானே பானம்லாம் தருவாங்கன்னு கூப்பிட்டீங்க. இப்போ எங்கேய்யா போனீங்க?" என முரளிக்கண்ணனைத் தேட அவரோ முதல் ஆளாக எஸ்ஸாகியிருந்தார்.

இப்படியாக நாங்கள் கலந்துகொண்ட வலைப்பதிவர் சந்திப்பு இனிதே முடிவடைந்தது.

என்னா பண்றது? பதிவு போட்டு நாளாச்சு. ஆர்வத்திலே நாளைக்கு மாலை வலைப்பதிவர் சந்திப்புக்கு வேற வரேன்னு சொல்லிட்டோ ம். அங்கே வந்து மொக்கைபோட ஒரு மொக்கைபதிவாவது வேணும்ல. அதான் ஹி. ஹி...
எப்படியும் சந்திப்பு முடிஞ்சவுடன் எல்லோரும் அரக்கஒஅரக்க ஓடிப்போய் போண்டா வேகலை, டீ யில் சர்க்கரை கம்மி அப்படின்னு எல்லா மேட்டரையும் அவசரமாக எழுதி மீ த பர்ஸ்ட்ன்னு தண்டோ ரா போடுவாங்க. அதனாலதான் நாங்க ஒருநாள் முன்னதாகவே பதிவு டோட்டுவிட்டோம்.


இப்போ நாங்கதான் மீஇஇஇஇ... த பர்ஸ்ட்........

தீவுத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்இதற்கிடையே இதுவரை வெளியான பதிவுகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை(!) தீர்ப்பதற்காக பொதுக்குழு கூட்டத்திற்காக கே.கே வும், என்.எஸ் ம் ஆபிஸிக்கு லீவ் போட்டுவிட்டு சித்தப்பூவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை STD யில் பிடித்தபோது....


யூ.கே: ஹலோ

கே.கே: சொல்றா.. அங்கே ஏதும் பிரச்சினையில்லையே...

யூ.கே: ** நீ பாட்டுக்கு சென்னையைவிட்டு ஓடினால் போதும்னு எஸ்ஸாயிட்டே.. இங்கே எந்த நேரத்துல எவன் வந்து அடிக்கப்போறான்னு தெரியாம பம்மிக்கிட்டிருக்கேன்.

கே.கே: விடுடா ஜமீன்லாம் ஒரு ஆளுன்னு பயப்படுறியே.. அதுவுமில்லாமல் உன் பேரை இதுவரைக்கும் எங்கேயும் சொல்லவேயில்லை.. அதனால் ஜமீனுக்கு நீதான் எழுதறேன்னு உன்மேல டவுட் வர சான்ஸே இல்லை.. சும்மா தைரியமா தூங்கு..

யூ.கே: அது சரிதான் மச்சி.. ஆனால் இப்போ போட்டேன் பாரு ஜுனியர் மேட்டர் பத்தி ஒரு பதிவு. அது எனக்கும்,ஜமீனுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு ரகசியம். இதைப்படிச்சா சத்தியமாய் நான் தான் எழுதினேன்னு கண்டுபிடிச்சுடுவான்..

கே.கே: டேய் யூ.கே... ஜமீன் என்ன பெரிய இவனாடா.. சரி ஒண்ணு பண்ணு.. நாளைக்கே ஜமீனை நேரிலே போய்பாரு.. முதல்ல கொஞ்சம் குதிப்பான். அப்படியே ரெண்டு ஜிங்காரோ பீரும், ஒரு சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு போனேன்னு வைச்சுக்கோ அப்படியே ஆஃப் ஆகிடுவான்.அப்படியே மப்புல அவன் வாயை கிண்டி இன்னும் கொஞ்சம் மேட்டரு தேத்திக்கிட்டு வா.. அடுத்த பதிவுக்கு யூஸாகும்..

யூ.கே: இப்போ பிரச்சினை ஜமீன் இல்லை.. புதுசா இன்னொண்ணு...

கே.கே: என்னதாண்டா பிரச்சினை.. விவரமா சொல்லித் தொலைடா..

யூ.கே: நம்ம வலைப்பூல கேப்டன் படத்தை வைச்சு காமெடி பண்ணியிருக்கோம்னு அவங்க கட்சிக்காரங்க நாளைக்கு தீவுத்திடல்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாங்களாம்.

கே.கே: சரி விடு அதுக்கு முன்னாலேயே நம்ம ஒரு பதிவைப்போட்டு நம்ம தரப்பு நியாயத்தை சொல்லிடலாம்.

யூ.கே: அப்புறம் நம்ம வலைப்பூக்கு ஆங்கிலத்துல தலைப்பு வைச்சிருக்கோமாம். அதுவுமில்லாமல் ஒரு வெளிநாட்டு மதுபானத்தை வேற பெருமையா சொல்ற மாதிரி எழுதறோமாம்.அதனால் உடனடியா வலைப்பூவையே பிளாக்கர்ல இருந்து தூக்கணுமாம்..

கே.கே: இப்படியெல்லாம் யாருடா சொன்னாங்க?

யூ.கே: நம்ம மருத்துவர் ஐயாதான்..

எதிர்முனை உடனே துண்டிக்கப்படுகிறது.

டேய் தம்பி.. உன்னைத்தான்...


ஜமீனுடனான அனுபவங்களை யூ.கே தொடருகிறார்

ஜமீனின் தைரியத்துக்கு உதாரணமான நிகழ்ச்சி..


அது காலேஜ் படைப்பின் கடைசி வருடம். விதியின் சதியால் நானும், ஜமீனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அது ஒரு வாரஇறுதியின் மாலைநேரம்.நானும் ஜமீனும் வழக்கமான டீக்கடையில் அமர்ந்து கிங்ஸ் புகைத்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு ஜுனியர் மாணவன் டீக்கடையோடு இணைந்திருந்த பைக் ஸ்டேண்ட்டில் பைக்கை நிறுத்த வந்தான்.அவன் ஜமீன் டிபார்ட்மெண்ட்(முக்கியமாக ஜமீனுக்கு ஜூனியர்). அவன் நாங்கள் உட்கார்ந்திருந்ததை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. யாரோ அமர்ந்திருப்பதுபோல் அவன் தான்வந்த வேலையைப் பார்க்க ஸ்டேண்டினுள் சென்றான். எனக்கு அதுகூட பெரிதாக தோன்றவில்லை. அவன் எங்களைக் கடக்கும்போது ஜமீனைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டுச் சென்றான். என்னத்தான் அவன் ஜமீனைத்தான் பார்த்தாலும் கூட அது என்னையும் அவமானப்படுத்தியது போலிருந்தது.(பின்னே இருக்காதா.. ஜமீனும்,நானும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லவா?)

ஜமீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இதோ:

நான்: ஜமீன்! அவன் உங்க ஜுனியர்தானே..

ஜமீன்: ஆமாடா.. அதுக்கென்ன..

நான்: இல்லை.. சீனியர் ஒருத்தன் இங்கே உட்கார்ந்திருக்கே.. கொஞ்சம்கூட மரியாதை கொடுக்காமல் அவன்பாட்டுக்கு போறான்?

ஜமீன்: இப்ப அதுக்கென்னடா பண்ணலாம்கிறே?

நான்: இல்லை.. நானாவது வேறு டிபார்ட்மெண்ட். பரவாயில்லைன்னு விட்டுடலாம். ஆனால் நீ அவனோட டிபார்ட்மெண்ட் சீனியர். உன்னையே மதிக்காம போறானே?

ஜமீன்: ம்.. ம்.. (புகையை ஆழமாக இழுத்து விட்டபடியே ஏதோ தீவிரமாக யோசிக்கிறார்)

(இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த மாணவன் என்னத்தான் ஜுனியர் என்றபோதிலும் கூட வயதில் எங்களைவிட மூத்தவன்.பார்ப்பதற்கும் நல்ல வாட்டசாட்டமாக இருப்பான்.காலேஜ் ரவுடிகள் கூட்டத்தில் அவனும் இருந்ததாக ஞாபகம்.சாதாரணமாக பேசும்போதே கொஞ்சம் திமிருடன் பேசும் டைப். எதற்காக இவ்வளவு பில்ட்-அப் என்பது பின்னால் உங்களுக்கே தெரியும்)

இப்போது அவன் எங்கள் முன்னால் திரும்பியபடி நின்று கடைக்காரரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஜமீன் அந்த ஜுனியரை அழைக்கிறான்.

ஜமீனுக்கும், ஜூனியர் மாணவனுக்கும் நடந்த உரையாடல் இதோ:

ஜமீன்: டேய்!...

ஜுனியர்: (காதில் வாங்காமல் தொடர்ந்து கடைக்காரரிடம் பேசுகிறான்)

ஜமீன்: டேய் தம்பி.. உன்னைத்தான்...

ஜூனியர்: (இந்தமுறை திரும்பிப்பார்த்து ஜமீனைத்தவிர எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிவிடுகிறான்)

இதைக்கண்ட நான் ஜமீனைப் பார்த்து ஏளனப் புன்னகை பூக்க, அவ்வளவுதான் ஜமீனுக்கு கோபம் வந்துவிட்டது.

ஜமீன்:டேய்.. உன்னைத்தாண்டா.. காது செவிடா?

ஜூனியர்: யாரை என்னையா கூப்பிட்டே?

(அவன் ஜமீனை ஒருமையில் கூப்பிட்டபோதே எனக்குள் எங்கோ பல்பு எரிய ஆரம்பித்தது.சரி நமக்கு எதுக்கு வம்பு என பெஞ்சின் இன்னொரு முனைக்கு மெதுவாக நகர ஆரம்பித்தேன்)

ஜமீன்: ஆமாண்டா.. உன்னைத்தான் கூப்பிட்டேன்.

ஜூனியர்: என்னது டா.. வா? என்னைத் தெரியுமா உனக்கு? இல்ல உன்னைத்தான் எனக்கு தெரியுமா? என்றபடியே லேசாக முறைத்துப் பார்த்தான்.

ஜமீன்: ஏண்டா.. சீனியருக்கு மரியாதை கொடுக்கமாட்டியா? நீ பாட்டுக்கு போறே?

ஜூனியர்: யார்டா சீனியர்? எதை வைச்சு சொல்றே?

ஜமீன்: நான்தாண்டா.. இப்பத்தான் டிபார்ட்மெண்டுக்குள்ளேயே வந்திருக்கே.. அதுக்குள்ளே இவ்வளவு திமிரா உனக்கு?

ஜுனியர்: டேய் தம்பி.. நீ சீனியர்னா அதைக் காலேஜோட வைச்சுக்கோ.. தேவையில்லாமல் பேசிக்கிட்டிருக்காதே..

ஜமீன்: (கொஞ்சம்கூட அசராமல்) உன்னையெல்லாம் முதல்நாளே தட்டி வைச்சிருக்கணுண்டா.. இவ்வளவு நாள் விட்டுவைச்சேன் பாரு என்னைச் சொல்லணும்..

ஜுனியர்: சின்னப்பயலா இருக்கியேன்னு பார்க்கறேன்.. ** ஒரு அடிக்கு தாங்குவியாடா நீ..

ஜமீன்:டேய் என்னைப்பத்தி உனக்கு தெரியாது.. காலேஜீக்குள்ளே வந்துபாருடா நீ வைச்சுக்கறேன்..

ஜுனியர்: என்னடா செய்யப்போற.. இங்கேயே செய்டா பார்க்கலாம்.

ஜமீன்: வேண்டாம் தம்பி.. ஓவரா போறே.. நல்லாயில்லை..

ஜுனியர்: மறுபடியும் தம்பி கிம்பின்ன அடுத்த வார்த்தை பேச வாயிருக்காது ஆமாம்..

உடனே தம்மை கீழேபோட்டு வேகமாய் எழுந்தவன், படாரென அவனை அடிக்க கையை ஓங்க, பதிலுக்கு அவனும் ஓங்க நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரர் இடையில் புகுந்து கெஞ்சிக் கேட்டதன் பேரில் ஜமீன் அடிவாங்காமல் தப்பித்தார்.

அவன் ****** ,****** என திட்டியபடியே அங்கிருந்து நகன்றபின் மெதுவாக ஜமீன் அருகில் சென்றேன்.

(இவ்வளவு நேரம் என்னடா செய்தேன்னு யோசிக்கிறீங்களா? நான்பாட்டுக்கு ஆர்வக்கோளாறுல களத்தில குதிச்சிருந்தேன்னா ரத்தம் பார்க்காம அடங்க மாட்டேனப்பு.. ஆனால் அந்த ஜூனியரை பார்த்தால் எனக்கு ஏனோ சண்டை போடவே தோணலை)
(ஸ்.... அப்பாடா... நம்ம கேரக்டரை நியாயப்படுத்திக்க என்னவெல்லாம் பில்ட்‍‍அப் கொடுக்க‌ வேண்டியிருக்கு... முடியலடா சாமி...)

நான்: ஏன் ஜமீன்.. எதுக்கு இப்படி நடந்துக்கிட்டே? என்றேன் ஒன்றுமே தெரியாதபடி..

ஜமீன்: *********** அவனுக்கு இருக்குடா.. திங்கட்கிழமை காலேஜிக்குள்ளே வரட்டும் வைச்சுக்கறேன்..

நான்: சரி விடுடா ஜமீன்...

ஜமீன்: இல்லடா நம்ம கடையாச்சேன்னு பார்த்தேன்.. வேற எங்கேயாவது சிக்கியிருந்தான்னா அவனை *******

நான் இன்னும் ரெண்டு கிங்ஸை வாங்கி பற்றவைத்து ஜமீனின் கோபத்தை குறைத்தேன்.

ஜமீன்: மாப்ளே....

நான்: சரி ஜமீன்.. புரியுது.. வழக்கம்போல இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லவேண்டாம்.. அதானே.. கவலையை விடு.. யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்.

அதன்பின் முதல்முறையாக இப்போதுதான் அந்தவிஷயத்தை பற்றி வெளியே சொல்கிறேன்


நான் சொல்லவந்த விஷயம் ஜமீனின் தைரியத்தைப் பற்றி.. கரெக்ட்.. ஆங்.. அது காலேஜீம் கிடையாது.. சப்போர்ட்டுக்கு ஆளும் கிடையாது. எதிர்த்து நிக்கறவன் ரெண்டு அடி அடிச்சுட்டானா திருப்பி அடிக்கவும் முடியாது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் யோசிக்காமல் நம்ம தலை ஜமீன் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு களத்தில குதிச்சிடுவாரு.. ஆனால் அடிமட்டும் வாங்காமல் எஸ்ஸாகிடுவாரு.. அதான் ஜமீனோட திறமை..
ஜிங்காரோ ஜமீன்

வ.வா.சங்கத்துக்கு ஓர் எச்சரிக்கை...

இதுவரை வெளிவந்திருக்கும் பதிவுகளினால் கடும் கோபமுற்ற சிலர் வன்முறையைக் கையாண்டும் கூட, நாங்கள் சிறிதும் அஞ்சாததால் இப்போது வ.வா.சங்கத்தின் துணையோடு எமது வலைப்பூ தளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளனர். எனினும் நமது நண்பர்களின் உதவியால் வலைப்பூ மீண்டும் சீர் செய்யப்பட்டது. அதனாலேயே இரு நாட்களாக இந்த சிறு தடங்கல். மேலும் எங்கள் வலைப்பூவிற்கு எதிராக உலகமெங்கும் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனன. அது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.மேலும் ஜமீன் எங்களுக்கு எதிராக மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் ஜமீனின் கதையை இப்போது தொடர முடியவில்லை. மாற்று ஏற்படாக ஜமீனின் நெருங்கிய நண்பரும், காலேஜ் பெருசுமான மச்சியின் மொக்கை வரலாறு அடுத்த பதிவிலிருந்து தொடங்கும்.

ஏன் இந்தப் பிரச்சினையில் வ.வா.சங்கத்தை இழுக்கிறோம் எனில், தலை ஜமீனுக்கு பிளாக் என்றால் என்ன? என்பதையே இரு நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் இது ஒரு கூட்டுசதி என உறுதியாக அறியமுடிகிறது.
மேலும் 2 நாட்களூக்கு முன் ஜமீனை வ.வா.சங்கத்தில் பார்த்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

பதில் தெரியாத ஒரு கேள்வி...

ஜமீனுடனான தனது அனுபவங்களை பற்றி Mr.யூ.கே தொடர்கிறார்:

அட.. இன்னும் முழுசா ரெண்டு பதிவுகூட போடலை அதற்குள் இந்தியா ஆஸ்திரேலியா செகண்ட் பைனல் ரேஞ்சுக்கு பரபரப்பு தொத்திக்கிச்சே.. எல்லாம் எதிர்பார்த்ததுதான்.. சரி நம்ம மொக்கையை தொடருவோம்.

ஜமீன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா தலைக்கு தாழ்வு மனப்பான்மைங்கற விஷயம் கடுகளவுக்கு கூட கிடையாது. இது ஜமீனை நக்கல் பண்றதுக்காக சொல்லலை. சத்தியமான உண்மை. எனக்கு ஜமீன் அறிமுகமான முதல் நாளிலிருந்து இன்றுவரைக்கும் தனது உயரத்தைக் குறித்து கவலைப்பட்டதோ அல்லது அதைவைத்து மற்றவர் ஜமீனை கிண்டல் செய்ததாகவோ ஒரு நிகழ்ச்சி கூட கிடையாது என உறுதியாக கூறமுடியும்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது. நம்ம கே.கே தன் பதிவுல சொன்ன விஷயம் இது. இது நூத்துக்கு நூறு உண்மை.


ஏன் சொல்றேன்னா எங்க காலேஜ்ல மச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வயசுக்கு அவனவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். ஆனால் மச்சியோ அந்தவயதில் எங்களுடன் காலேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு படிப்பின்மேல் தீராத ஆர்வம்(?). சரி விஷயத்துக்கு வருவோம்.காலேஜில் ரவுடிகளாக வலம்வந்த சில மாணவர்கள் கூட மச்சியை கண்டால் மரியாதையுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நழுவிவிடுவர். இப்படிப்பட்ட மச்சியை ஜமீன் அழைப்பது யோவ் பெருசு! என்றுதான். அதுவும் உ.பா துணையுடன் இருக்கும் நேரங்களில் அன்புடன் வாடா,போடா எனவும் அழைப்பதுண்டு. மச்சி வயசு என்ன? நம்ம எப்படி? இந்த மாதிரியெல்லாம் ஜமீன் கூச்சப்பட்டு பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு ஜமீன் நட்புக்கும், நண்பர்களுக்கும் மரியாதை(?) கொடுப்பவர்.

அதேபோன்று ஜமீனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் பின் நானே ஜமீனின் தைரியத்தை பலரிடம் பரப்பினேன். அந்த இனிமையான நிகழ்வை இப்போது நேரமில்லாத காரணத்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிக்கிறேன்.

ஒருமுறை ஜமீனிடம் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஜமீன்! உனக்கு எதுக்கு ஜமீன் அப்படின்னு பெயர் வந்தது? யார் வைச்சாங்க?" என ஆவலாகக் கேட்டேன். உடனே ஜமீன் "அதுவா மச்சி! ஒரு கிங்ஸ் வாங்கு சொல்றேன்.. என்றார். நானும் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த காரணத்தை அறியும் ஆவலில் கிங்ஸ் வாங்கி கொடுத்தேன். பற்றவத்து புகைத்த ஜமீனைப் பார்த்து, "ஜமீன் நான் கேட்டது?" என்று ஞாபகப்படுத்த "ஸ்ஸ்ஸ்... தம்மடிக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.. அசிங்கமா இல்லையா அண்ணனுக்கு.." என்ற ஜமீன் "தம்"மை தொடர்ந்தார். எல்லாம் நேரம்டா மகனே! என்று மனதுக்குள் நினைத்தபடியே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன்.கிங்ஸ் எண்ணிக்கை மட்டும் 1..2..3.. என பழைய இந்திய அணியின் ஸ்கோர்போர்டு போல் தொடர எதிர்பார்த்த பதிலைத்தான் காணோம். சரி.. இதற்குமேலும் வெயிட் செய்தால் கடைசியாக பஸ்ஸிக்கு பைசா இல்லாமல் நடந்துதான் ரூமுக்கு போகவேண்டுமென்ற யதார்த்த நிலை உறைக்க "சரி ஜமீன் நீ யோசிச்சு அப்புறமா சொல்லு.. எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்.." என்று நழுவினேன்.

(ஆனால் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஜமீனிடமிருந்து வரவில்லை.யார் மூலமாகவாவது இந்தப் பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகத்தின் ஏதோ ஒரு மூலையிருந்து படித்துவிட்டு அந்தக் கேள்விக்கான பதிலை ஜமீன் விரைவில் சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் யூ.கே வாகிய நான் இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்)

ஜமீனுடனான மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். - யூ.கே