எங்களது முதல் பதிவர் சந்திப்பு. அற்புதமான ஒரு ஞாயிற்றுகிழமை மாலைநேரம்.காந்திசிலை பின்புறம் இருந்த திறந்தவெளி. மாலைநேரம் சிலுசிலுவென வீசிய காற்றில் வரவிருந்த மழைகூட சந்திப்புக்காக கூடியிருந்த பதிவர்களை பார்த்து பயந்து வராமலேயே போய்விட்டது.
இப்படி ஆரம்பிக்க்லாம்னு தயார் செய்துகொண்டு இருக்கும்போதே அதிஷாவும், டோண்டு ஸாரும் நடந்ததை எல்லாம் எழுதிட்டாங்க. சரி நம்ம பங்குக்கு இதோ. என்ன பண்றது
முதல்முறையாக பதிவர் சந்திப்புக்கு போனதால் உங்கள் சமீபத்திய பதிவு என்னங்க? என்ற ரீதியில் கேள்விகளை தவிர்க்க சனிக்கிழமை காலையே இந்த பதிவர் சந்திப்பு குறித்து முன்னதாக போட்ட பதிவுக்கு(இரு பதிவுகளையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்) வந்த பின்னூட்டங்களின் மிரட்டல்களால் சற்றே பீதியடைந்திருந்தாலும் கூட, சரி என்னதான் நடக்குதுன்னு போய்தான் பார்போமே என முடிவுசெய்து கிளம்பிப்போனோம்.
அண்ணன் லக்கிலுக், அதிஷா, மற்றும் உண்மைதமிழன் ஆகியோர் அன்பாக(?) சிறப்பு அழைப்பு விடுத்திருந்தபடியால் சற்றே முன்னெச்சரிக்கையுடன் சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு(ஒரு பாதுகாப்புக்குதான்:)) அரைமணி முன்னதாகவே காந்திசிலையை அடைந்தோம். சரியாக எந்த இடமென தெரியாததால் வலையுலகின் ஒரேநண்பரான(சந்திப்புக்கு முன்) அதிஷாவை செல்லிடபேசியில் பிடித்தோம்.
"அதிஷா ஜிங்காரோ பேசறேங்க"
"சொல்லுங்க ஜிங்காரோ. எங்கே இருக்கீங்க?"
"இங்கே காந்திசிலை பக்கத்திலேதாங்க இருக்கேன். எங்கே சந்திப்பு நடக்குதுன்னு தெரியலீங்க"
"காந்திசிலைக்கு பின்னாடி பாருங்க. யாராவது 10 பேர் கூட்டமா உட்கார்ந்திருக்காங்களா?"
"அட ஆமாங்க அதிஷா இங்கே ஒரு குரூப் உட்கார்ந்திருக்காங்க"
"அதிலே ஒரு 4 பேர் சீரியஸா விவாதிச்சுக்கிட்டு இருப்பாங்க. ஒரு 4 பேர் அவங்க வாயையே பார்த்துக்கிட்டிருப்பாங்க. ஒரு 2 பேர் கடந்துபோற மகளிரணியை சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்களா?"
"அதிஷா எப்படிங்க இவ்வளவு சரியா சொல்றீங்க?நீங்களும் என் பக்கத்திலேதான் எங்கேயாவது நின்னு பேசறீங்களோ" என்றோம் சுற்றும்முற்றும் பார்த்தபடியே சந்தேகத்தோடு.
"இத்தனை மாச அனுபவத்திலே எத்தனை சந்திப்பை பார்த்திருப்பேன்" என்ற அதிஷாவிடம்
சரி சரி அடங்குங்க என மனதுக்குள் நினைத்தவாறே "சரிங்க அதிஷா நாங்களும் போய் இப்போதே அந்த ஜோதியில் ஐக்கியமாகிடுறோம். சீக்கிரம் வாங்க" என்றபடியே கைப்பேசியை இணைப்பை துண்டித்தேன்.
உடன்வந்த நண்பர்களிடம் "மாப்பிஸ்! இதுதான் ஸ்பாட். ஆளுக்கொரு மூலையில் போய் நின்னுக்குங்க. பார்வை மட்டும் எங்க மேலேயே இருக்கட்டும். ஏதாவது பிரச்சினைன்னா சிக்னல் காட்டுறோம் ஆஜராகிடுங்க" என்றபடியே நாங்கள் மட்டும் தனியாக ஒரு ஜம்ப் செய்து அந்த நீரில்லாத குளத்தில் குதித்தோம்.
கொஞ்சம் வேகமாக குதிச்சுட்டேன்னு நினைக்கிறோம். அங்கே கூட்டமாக உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தஅந்த நண்பர்கள் அனைவரும் ஒருநொடி திகிலடைந்து பேச்சை நிறுத்தி எங்களைப் பார்த்தனர்.
அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் "அண்ணே! இங்கே பதிவர் சந்திப்பு நடக்குதுன்னாங்களே.. " என வினவ, பதிலுக்கு அவரோ காந்திசிலையை கைகாட்டி வாய்க்குள்ளேயே ஏதோ பேசினார். எங்களுக்கு ஒன்றுமே கேட்காமல் மீண்டும் வினவ, அதேபதில். சரி.. ஏதோ சொல்லவராரு. நிச்சயமாக இங்கே இல்லன்னு மட்டும் சொல்லலை என உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து வெளியேறி சில் அடிகள் தொலைவிலேயே அமர்ந்தபடி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தோம்.(மெய்காவலர் துணையுடன்)
சில நிமிடங்களிலேயே அந்த குரூப் கலைந்துசென்றது. இப்போது இடம் காலி. ஆனால் பதிவர்கள்தான் ஒருவரையும் காணோம். என்னடா இது வம்பா போச்சு. ஒருவேளை ஓவர்நைட்ல கண்ணகி சிலையை ஆட்டையை போட்டமாதிரி ஒருவேளை காந்திசிலையையும் இடம் மாத்தி இருப்பாங்களோ? என்ற சந்தேகத்துடன் மீண்டும் ஒருமுறை சிலைப்பக்கம் சென்று அவர் அண்ணல் காந்திதான் என உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பினோம்.
இப்போது அந்த இடத்தில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவரையும் பார்த்த ஞாபகமே இல்லை(என்னமோ இதுக்கு முன்னால எல்லா வலைப்பதிவர் சந்திப்புக்கு போய் எல்லோரோடயும் அறிமுகம் ரேஞ்சுக்கு பேசாதீங்க என யாரோ முணுமுணுப்பது கேட்கிறது) ஆனால் சற்றே உற்று கவனித்ததில் ஒரே ஒரு இளைஞரை மட்டும் எங்கேயோ பார்த்த நினைவு. ஆங்..கடைசியில் ஞாபகம் வந்துவிட்டது. அண்ணன் லக்கிலுக்தான் அது. ஏதோ ஒரு வலைப்பக்கத்தில் புகைப்படம் பார்த்த நினைவு.இருந்தாலும் ஒரு அவர்தானோ என ஒரு தயக்கம்.உடனிருந்த மெய் காப்பாளரோ "மாப்பி! உங்ககூட நாங்க வந்திருக்கிற விஷயம் லீகவுட் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்.அதான் எல்லாம் எஸ்ஸாகிட்டாங்க போல. அப்போ நம்ம கிளம்பலாமா?" என நச்சரிக்க ஆரம்பித்தார்.
"இல்லை நண்பா..அங்கே உட்கார்ந்திருக்கிற குரூப்பை பார்த்தா இவங்கதானோன்னு சந்தேகமா இருக்கு. அதுவும் அந்த ஊதாகலர் டீஷர்ட் பார்ட்டி. வலைப்பதிவர்தான் சந்தேகமே இல்லை."
"சரி அப்போ போய் கலந்துக்குங்க. நேரமா வீட்டுக்கு போவோம்"
"இல்ல நண்பா. இன்னும் கொஞ்சநேரம் வெயிட் பண்ணுவோம்." என சொல்லிக் கொண்டிருக்கும்போதே வலையுலகின் நவரச நாயகர் அய்யா டோண்டு ராகவன்(சத்தியமா லக்கிலுக் இப்படி எழுத சொல்லலீங்க) காந்திசிலையை கடந்து வேகமாக வந்து் கொண்டிருந்தார்.
அவரைப்பார்த்ததும் நாங்கள் "நண்பா! இவங்கதாண்டா பதிவர்கள். உறுதியாகிடுச்சு" என்றோம்.
"எப்படி மாப்பிஸ்! அவ்வளவு உறுதியா சொல்றே?"
"அதோ அங்கே வரார் பார் ஒரு இளைஞர்:) அவர்தான் டோண்டு ராகவன் ஸார். அவர் இல்லாமல் சென்னையிலே எந்த சந்திப்புமே நடக்காது. அதான் சொல்றோம்"
"அதுசரி அவர்தான் டோண்டுராகவன் ஸார்னு எப்படி சொல்றீங்க?"
"அட ஆமாப்பா.. அவர் போடுற ஒவ்வொரு பின்னூட்டத்திலேயும் காந்திதாத்தா ஸ்டாம்ப் சைஸீக்கு அவர் புகைப்படம் வந்துக்கிட்டே இருக்கும்ப்பா. நிறைய தடவை பார்த்திருக்கோம்"
"அப்போ சரி மாப்பி"
"சரி நண்பா! ஆரம்பிச்சுடுவாங்க போல. நான் போறேன். ஏதாவது பிரச்சினைன்னா மட்டும் வந்து ஆஜராகிடு. மறந்துடாதே" என்றவாறே மறுபடியும் போய் களத்தில் குதித்தோம்.
முன்னர் வினவியபோது காந்திசிலையை கைகாட்டிய அதேநபர்(மன்னிக்கவும் பெயர் மறந்துவிட்டது) இந்த குரூப்பிலும் இருந்தார். மீண்டும் ஆவேசமாய் களத்தில் குதித்து ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்னத்தோடு நெருங்கிய எங்களைப் பார்த்த அந்த நண்பர் "இதோ இவங்க முதலிலேயே வந்து தேடிக்கிட்டிருந்தாங்க" என அறிமுகப்படுத்த சற்றே அமைதியாகி ஒரு புன்சிரிப்போடு களமிறங்கினோம்.
நமது பெயரை ஜிங்காரோ என அறிமுகப்படுத்திக் கொண்டதுமே அங்கிருந்தோர் கண்களில் அப்படி ஒரு ஆர்வம்(இருக்காதா பின்னே!2 நாளாக தேடிக்கிட்டு இருக்காங்களே...). சற்றே பயத்துடன் அங்கே அமர்ந்தோம்.
மெய்காப்பாளரை திரும்பிப்பார்த்தால் அவரது பார்வையோ கடந்துசென்ற ஒரு பெண்ணை தொடர்ந்து கொண்டிருந்தது. சரி இன்னைக்கு நேரம் சரியில்லை என்றவாறே நிமிர்ந்து பார்த்தேன்.
"எங்கேங்க அதிஷா" என்ற லக்கிலுக்கிடம் "வந்துக்கிட்டே இருக்கார்" என்றதும் ஏதோ அர்த்தத்தோடு சிரித்தார்.(சத்திய்மாக எதற்கு என தெரியவில்லை)
இவ்வளவு நேரமும் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி கையில் துடைத்துக் கொண்டிருந்த அந்த நண்பர் என்னை தீர்க்கமாக ஒருமுறை பார்த்தார். ஆஹா! இப்படி பார்க்கிறாரே.. ஒருவேளை இவருதான் உண்மைதமிழனா இருப்பாரோ என பயத்துடன் பார்த்தோம்.
"ஏங்கப்பா என்மேல் இந்த கொலைவெறி உங்களுக்கு? என்றார் ஆவேசத்துடன்.
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. என நினைத்தவாறே நமது மெய்காப்பாளரை பார்க்க, அவரோ வெகுதூரத்தில் கடற்கரை மணலில் மகளிரணி பின் சென்று கொண்டிருந்தார்.
"விடு ஜிங்காரோ இந்த சிச்சுவேஷன் நமக்கெல்லலாம் புதுசா என்ன? சமாளிப்போம்" என மனதுக்குள் பேசியபடியே ஆவேசப்பட்ட அந்த நண்பரை பார்த்தோம்.
"அண்ணே! நீங்கதான் உண்மைதமிழனா?இல்லேன்னா நீங்க யாரு?"
"யோவ்! நான் பாலபாரதிய்யா.. என்னைப்பார்த்து பதிவர் சந்திப்புல நீங்க யாருன்னு கேட்ட முதல் ஆள் நீங்கதாண்டா.. உங்களை நான் தனியா கவனிச்சுக்கறேன்." என போக்கிரி பட விஜய் ரேஞ்சுக்கு பஞ்ச் டயலாக் அடிக்க ஆரம்பித்தார்.
"ஆஹா! இன்னைக்கு ராசிபலன் படிக்காம வந்தது ரொம்ப தப்போ?" என நினைத்தபடியே அமர்ந்திருந்தோம்.
"அது என்னங்க பேரு ஜிங்காரோ ஜமீன்?" என லக்கிலுக் கேட்டார்.
"ஆஹா! எங்கள் ஆருயிர் அண்ணன் ஜமீனின் புகழ்பாட இப்போதாவது நேரம் கிடைத்ததே" என சொல்ல முயற்சிக்கும்போதே மீண்டும் குறுக்கிட்ட லக்கிலுக் "சரியான மொக்கை சரக்குங்க அது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.
(நல்லவேளை ஜமீன் அங்கே இல்லை. இல்லேன்னா ரணகளமாகியிருக்கும் ஆமா..)
இதற்கிடையே நவரச நாயகர் டோண்டு எழுந்து ஒவ்வொருவரிடமும் அறிமுகப் படலத்தை ஆரம்பித்தார். என்முறை வந்ததும் ஜிங்காரோ என்றதும் "யெஸ்.. யெஸ் உங்க பதிவுகள் எல்லாம் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க" என்றார்.
என்னடா வந்தவுடனே இப்படி கலாய்க்கிறார். ஒருவேளை இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ? என நினைத்தபடியே அமர்ந்திருந்தோம்.
"உங்க சமீபத்திய பதிவு என்ன?" என தொடர்ந்தார் டோண்டு.
இப்படி கேட்பாங்கன்னு தெரிஞ்சுதான் சனிக்கிழமையே போட்ட பதிவர் சந்திப்பு பதிவைப்பற்றி கூறினோம்.
"கரெக்ட். படிச்சேன். படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.. பின்னூட்டம் கூட போட்டேனே" என்றார் டோண்டு ஆர்வமுடன்.
படிச்சுட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கார் என சந்தேகத்துடனே "இருக்கலாம் ஸார்.. நாங்க சரியா பார்க்கலை" (ஒருவேளை பின்னூட்டம் போட்டிருந்தீங்கண்ணா கூட அண்ணன் உண்மைதமிழன் பின்னூட்ட வேகத்தில் உங்களது சிக்கியிருக்கும்) என வழிந்தோம்.
எப்படிடா தப்பிக்கலாம் என்ற யோசனையிலேயே அமர்ந்திருந்த எனக்கு வருணபகவான் கைகொடுத்தார். சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டுமே பெய்யும் மழை அன்று எதிர்பாராமல் பொழிய ஆரம்பித்தது. ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓட, நாங்களும் அங்கிருந்து எகிறினோம்.
கண்ணை மூடிக்கொண்டு மூச்சிரைக்க ஒரு 50 மீட்டர் தூரம் ஓடி, ஒரு மரத்துக்கு அடியில் ஒதுங்கியிருந்த கூட்டத்தில் கலந்து, பதுங்கியவாறே அப்பாடா ஒருவழியாக தப்பித்தோமடா சாமி என்றவாறே திரும்பிப்பார்த்தால் லக்கிலுக், முரளிக்கண்ணன், டாக்டர் புருனோ நம்மைச்சுற்றி ரவுண்ட் கட்டி நின்றிருந்தனர். ம்ஹீம்.. அண்ணாத்தேல்லாம் ஒரு முடிவோடத்தான் இன்றைக்கு வந்திருக்காங்க என நினைத்தபடியே கலங்கியபடி நின்றிருந்தோம்.
இதற்குள் பாலபாரதி யாருக்கோ கைப்பேசியில் அழைப்புவிட, நமக்கோ வடிவேல் காமெடியில் வரும் "மாப்பி! இங்கே ஒருத்தன் தனியா வந்து மாட்டி இருக்காண்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு நினைக்கிறேன். நீயும் கொஞ்சம் வந்து கவனிச்சுட்டு போ" என்ற வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தது.
எதிர்பார்த்தது போலவே சில நிமிடங்களில் மழையோடு மழையாக அந்த நண்பரும் வந்து இணைந்துகொண்டார். அவர்தான் புது மாப்பிள்ளை சுகுணாதிவாகர் என்பது பின்னர் தெரிந்தது. இந்த குரூப்பில் ஒரு நண்பர் மட்டும் அடிக்கடி நம்மை திரும்பி பார்த்தபடியே இருந்தார்.
சரி.. வந்ததுக்கு பெயரையாவது கேட்போம் என "நீங்க ஸார்" என்றோம்.
"நான்தான் ஸார் அதிஷா" என்றார் சிரிப்புடன்.
"அப்படிங்களா" என்றோம் மிகவும் சந்தோஷத்தோடு. (பின்னே இருக்காதா முதல்நாள்தான் எங்களுக்கும் அவருக்கும் அறிமுகம். அதுவும் கைப்பேசியில் மட்டுமே பேசியிருக்கிறோம். முதன்முதலாக நேரில் பார்த்தவுடன் வரும் சந்தோஷம்தான்) :)
ஒருவழியாக மழைநிற்க, எல்லா கைப்பேசிகளையும் ஆட்டையை போட்டு :) கடல்பக்கம் சென்ற டோண்டுவை தேடி ஒரு குழு பயணித்தது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று ஒரு குழு விவாதித்துக் கொண்டிருக்கும்போதே விழாநாயகன் பாஸ்டன் பாலா வந்தார். உடன் அவரது நண்பரும்.
ஏற்கனவே வலைப்பக்கத்தில் புகைப்படத்தை பார்த்திருந்தாலும் கூட நேரில் இன்னும் இளமையாகவே இருந்தார். ஒருவழியாக டோண்டு ஸாரை கண்டுபிடித்து கூட்டிவந்து, அங்கங்கே சிறுசிறு குழுக்களாக கூடி கும்மி அடித்தவர்களையும் தேடிப்பிடித்து ஒரேஇடத்தில் அமரவைத்து இப்போ கும்மியடிக்க ரெடியா? என்றபடியே மாலை 6 மணிக்கு இனிதே சந்திப்பு துவங்கியது.
டோண்டு ஸார் பாஸ்டன் பாலாவின் அருகில் அமர்ந்துகொண்டார். நிறைய புது பதிவர்கள் வந்திருப்பதால் ஒரு சிறிய அறிமுகபடலம் துவங்கியது. அதன்முடிவில் நாங்கள் அறிந்துகொண்டவை.
அந்த சந்திப்புக்கு வந்திருந்தோர் விழா நாயகன் பாஸ்டன் பாலா, அவர் நண்பர் மூர்த்தி, டோண்டு ராகவன், பாலபாரதி, மருத்துவர் ப்ரூனோ, லக்கிலுக், முரளிகண்ணன், சுகுணா திவாகர், விக்கி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, வழக்கறிஞர் சுந்தரராஜன், அதிஷா, ஜோதிவேல், பைத்தியக்காரன், கடலையூர் செல்வம், கென், ஒரு பெண்பதிவர் லட்சுமி இவர்களோடு நாங்களும் (விடுபட்டவர்கள் மன்னிக்க. முதல் சந்திப்பு இது. அதனால் தவறுகள் இருக்கலாம்)
அறிமுகப்படலம் முடிந்ததும் பாஸ்டன் பாலாவின் நண்பர் ஜோல்னா பையிலிருந்து நொறுக்கு தீனிகளை(உபயம்: பாஸ்டன் பாலா) வெளியே எடுத்து அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தார்.
ஒரே ஒரு முறுக்கு, ஒரே ஒரு பருப்புவில்லை, ஒரே ஒரு இனிப்பு(நிசமாவே அவ்வளவுதாங்க) எடுத்துக்கொண்ட நாங்கள் சாப்பிட்டுகொண்டே கும்மியடிக்க ஆரம்பித்தோம்.
இனிப்பு, காரம் சுவையாக இருந்ததால் அடுத்த ரவுண்டை எதிர்பார்த்து காத்திருக்க, வரவேயில்லை.
கொஞ்சம் எட்டிப்பார்த்த பின்னர்தான் டோண்டு ஸார் பாஸ்டன் பாலாவின் அருகிலேயே அமர்ந்ததற்கான காரணம் புரிந்தது.(இன்னமும் புரியாதவர்கள் அடுத்த சந்திப்புக்கு வரும்போது எங்களிடம் நேரில் கேட்டுக்கொள்ளவும்) :)
இன்னும் இருக்கு....
சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..02
(தொடரும்)
சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..01
மொக்கை வகை
பதிவர் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
முதல் சந்திப்புலேயே இந்த கும்மியா!
பேருவேற ஜிங்கரோன்னு வச்சிருக்கிங்க!
கடற்கரை சந்திப்பு முடிஞ்சதும்
சமத்துவபுரத்துல ஒரு சந்திப்பு நடக்குமே
அத பத்தி ஒண்ணுமே எழுதல
வால்பையன்
வாங்க வால்பையன். முதல் தடவை இங்கே வர்ரீங்கன்னு நினைக்கிறேன். தொடர்ந்து வாங்க
//
முதல் சந்திப்புலேயே இந்த கும்மியா!
பேருவேற ஜிங்கரோன்னு வச்சிருக்கிங்க!
கடற்கரை சந்திப்பு முடிஞ்சதும்
சமத்துவபுரத்துல ஒரு சந்திப்பு நடக்குமே
அத பத்தி ஒண்ணுமே எழுதல
வால்பையன்
//
அப்படித்தான் சொல்லிக் கூப்பிட்டாங்க. கடைசியில வெறும் டீயோட அனுப்பிட்டாங்கண்ணா..
நிச்சயமாக உண்மைத்தமிழன் கூப்பிட்டு இருப்பார் -- நம்புகிறேன். :-))
சந்திப்பு பற்றிய அறிமுகம் நன்று. தொடரவும்.
வாழ்த்துகள்.
நல்லா எழுதுறீங்க தொடருங்க
வலைப்பதிவர் சந்திப்பில் ஒன்றும் நடக்கவில்லை என்றாலும், உங்கள் வர்ணனை அட்டகாசமாக இருந்தது. படிக்க மிக சுவராசியமாக இருந்தது.
தொடர்ந்து இதை போல சுவாரசியமாக எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
கிரி