எங்களுக்கு முதல் வலைப்பதிவர் சந்திப்பு என்பதால் சற்று தயக்கத்துடனேயே போனோம். தொடங்கும்நேரம் என குறிப்பிட்டிருந்த 5:45க்கு அரைமணி முன்னதாகவே சென்றடைந்தோம்.
நம்ம நேரமோ என்னவோ தெரியலை. மெரினாவில் காந்தி சிலை அருகில் ஞாயிற்றுகிழமை வழக்கமாக இருக்கும் கூட்டம்கூட அன்று இல்லை. ஒரு 10 நிமிட காத்திருப்புக்கு பின் திருதிருவென விழித்தவாறே இருவர் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தனர். ஒருவேளை ஏற்பாடு செய்த வலைப்பதிவராக இருக்குமோ என எண்ணும் நேரத்தில் அவர்களது செயல்படு வித்தியாசமாக இருந்தது. மெரினாவில் காற்றுவாங்க வந்தோர், நடைபயணம் மேற்கொண்டோ ர் என ஒருவரையும் விடாமல் நெருங்கிபோய் ஏதோ கேட்பதும் அவர்கள் மறுத்தவாறே விலகிச் செல்வதுமாய் இருந்தனர்.
திட்டமிட்டபடி வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமா? என எங்களுக்கு சந்தேகமாக இருந்தது. மணி 5:30ஐ தொட்டிருந்த நேரம். சரி ஒருமுறை அவர்களை கேட்டுப்பார்த்துவிட்டு கிளம்பலாம் என நினைத்த நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுமே எங்களிடத்தில் வந்தனர்.
அதில் ஒருவர் "ஸார்! ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" என்றார்.
"என்ன ஸார் சொல்லுங்க!"
"நீங்க ஸ்டூடண்ட்டா ஸார்"
"இல்லை பொட்டி தட்டுற வேலையிலே இருக்கோம். ஏன் கேட்கறீங்க?"
"அப்பாடா.. மச்சான் நான் அப்பவே சொன்னேன்ல.. ஸாரை பார்த்தா பில்கேட்ஸ் தம்பி மாதிரியே இருக்காருன்னு(:))"
"என்ன ஸார் சொல்றீங்க ஒண்ணும் புரியலையே"
"விபரமாவே சொல்றோம் சார்.. நான் பாலபாரதி. இவரு பேர் முரளிகண்ணன். இண்டெர்னெட்லே நாங்க வலைப்பக்கம் தொடங்கி பதிவு எழுதறோம் ஸார். இன்னைக்கு இங்கே ஒரு சின்ன கூட்டம் ஏற்பாடாகியிருக்கு. எங்களை மாதிரி எழுதறவங்க எல்லாம் சந்திச்சு பேசறதுக்கு"
"அப்படிங்களா.. அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?"
"குறுக்கே பேசாதீங்க ஸார்.. அப்புறம் நான் என்ன சொல்ல வந்தேன்கிறதை மறந்துடுவேன்" என்ற பாலபாரதி கண்ணாடியை கழட்டி துடைத்து மாட்டியவாறே "ஆங்... ஞாபகம் வந்துடுச்சு சார்.. சிறப்பு விருந்தினரா பாஸ்டன் பாலான்னு அமெரிக்காலேருந்து ஒருத்தர் வர்ரார். அவர் வர நேரம் இன்னைக்குன்னு ஒருத்தரையும் காணோம். கூட்டமே சேரலை. தப்பா நினைச்சுக்கலேன்னா ஒரு 30 நிமிஷம் மீட்டிங்ல உட்கார்ந்துட்டு போகமுடியுமா ஸார்"
என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் பாலபாரதி.
"சரி ஸார். கலந்துக்கறோம் ஆனால் எங்களுக்கு வலைப்பூ பத்தி அவ்வளவாக பரிச்சயமில்லையே"
"அதெல்லாம் ஒண்ணும் கவலையே படாதீங்க ஸார். யார் என்ன கேட்டாலும் ஒரு புன்னகையை மட்டும் சிந்துங்க போதும். எதுவும் பேசவேண்டாம். மீதியெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்" என்றார் முரளிக்கண்ணன்.
"அதுவுமில்லாமல் போண்டா, டீ, சமயத்தில் செட்டு சேர்ந்தால் பானம் கூட உண்டு ஸார். மிஸ் பண்ணிடாதீங்க" என்றார் பாலபாரதி.
"இல்லை ஸார் அதுவந்து.."
"என்ன ஸார் தயங்குறீங்க அதோ அங்கே பாருங்க.. கடலையே வெறிச்சு பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காரே அவர் பேரு லக்கிலுக். சொந்தமாக வலைப்பக்கம் வைச்சிருக்காப்ல. மீட்டிங் முடிஞ்சதும் பார்ட்டி உண்டுன்னு கேள்விப்பட்டு காலையிலே 10 மணிக்கே வந்து உட்காந்திருக்காரு" என்றார் பாலபாரதி.
"ஓ அப்படியா ஸார். ஓ.கே ஸார் நாங்க இருக்கோம்"
ஒருவழியாக 5:௪௫ எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்த உண்மையான வலைப்பதிவர்கள் சிலருடன் நாங்களும் சேர்துக்கொள்ள, ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது.
திடீரென கூட்டத்தில் முணுமுணுப்பு.
என்னவென்று பார்த்தால் பாஸ்டன் பாலா வந்து கொண்டிருந்தார். பின்னாலேயே நம்ம டோண்டு ஸாரும்.
மீட்டிங் ஆரம்பித்து ஏதேதோ பேசினார்கள். நாங்களோ வாக்கு கொடுத்தபடியே புன்னகையை மட்டுமே சிந்திக் கொண்டிருந்தோம். மனமோ போண்டா, டீயை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.
ஒருவழியாக 6:10 மணிக்கு சிறிய இடைவேளை விட ஆவலோடு எதிர்பார்த்த போண்டா, டீ யும் வந்தது. ஆவலோடு சூடான போண்டாவை வாங்கி, பாக்கெட்டிலிருந்த தமிழ்முரசு பேப்பரில் வைத்து எண்ணையை பிழிந்து சாப்பிடலாமென ஆவலாக வாயருகே கொண்டு சென்றால் திடீரென பெரும் பரபரப்பு.
"சுனாமி வர்ரார்! சுனாமி வர்ரார்!" என்ற கூச்சல்.
எங்களுக்கோ போண்டா, டீக்கு ஆசைப்பட்டு இப்படி சுனாமிக்கிட்டே மாட்டிக்கிட்டோ மேடா. அப்பவே ஓடியிருந்தா தப்பிச்சிருக்கலாமே. இனிமேல் ஓடக்கூட முடியாதே! அட கல்யாணம், காச்சின்னு கூட இன்னும் ஒண்ணையும் அனுபவிக்கலையேப்பா.. நம்ம கதி அவ்வளவுதானா" என ஏதேதோ எண்ணி கலங்கியபடியே கடலை திரும்பி பார்த்தால் அமைதியாகவே இருந்தது.
குழப்பத்துடன் திரும்பினால் கண்ணாடி அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் வந்து கூட்டத்தில் ஐக்கியமானார். பக்கத்தில் இருந்த வலைப்பதிவர் உதவியுடன் அவரைத்தான் சுனாமி என அன்பாக அழைத்திருக்கிறார்கள் என்பது புரிவதற்குள் போண்டாவும், டீயும் நன்கு ஆறிப் போயிருந்தது.
நம்ம சுனாமி பார்ட்டி வந்தவுடன் கூட்டம் களைகட்ட தொடங்கியது.
"எதுக்குப்பா ஒரு பதிவிலே வந்து சுனாமி மாதிரி அவ்வளவு பின்னூட்டம் போடறே?" என்றார் டோ ண்டு ஸார்.
"அது ஒரு இன்ட்ரெஸ்டிங் ஸ்டோ ரி ஸார்" என்றார் வலையுலக சுனாமி என்றழைக்கப்பட்ட உண்மைதமிழன்.
"என்னப்பா சொல்றே"
"ஆமாம் ஸார்.. இப்போ தமிழ்மணம் முகப்பு மாத்தி புதுசா அமைச்சிருக்காங்கள்ல சார். அதனாலே புது முகப்பு மாத்தின நாளீலிருந்து 50 நாள் கழிச்சு யார் அதுவரைக்கும் அதிகமாக பின்னூட்டம் போட்டிருக்காங்களோ அவருக்கு சிறப்பு பரிசா மலேசியா, சிங்கப்பூர் கூட்டிக்கிட்டு போய் அங்கே வலைப்பதிவர் சந்திப்புலே கலந்துக்க வைப்பாங்களாம் ஸார்"
"அப்படியா உண்மைதமிழா! புதுசா இருக்கே? ஏப்பா பாலபாரதி உனக்கு ஏதாவது தெரியுமா?" என்கிறார் டோ ண்டு ஸார்.
"இல்லையே ஸார்"
"உனக்கு யாருப்பா இதெல்லாம் சொன்னாங்க"
"அதோ அவர்தான் ஸார். தனிமடல் அனுப்பி ரகசிய விஷயம்னு வேற சொன்னாரு" என இன்னமும் போண்டாவை தின்று கொண்டிருந்த லக்கிலுக்கை கைகாட்டுகிறார் உண்மைதமிழன்.
"என்னங்க லக்கிலுக்! இப்படி சொல்றாரு"
"ஸார் அன்னைக்கு ராத்திரி அதிசயமா சாட்டிலே வந்தாரு. சரி சும்மா பிட்டை போடுவோம். ரெண்டு நாள் கழிச்சு உண்மையை சொல்லிடுவோம்னு பிட்டை போட்டேன். ஆனால் அப்புறம் நானே மறந்துட்டேன். இப்போதான் ஸார் ஞாபகமே வருது. அதை உண்மைன்னு நம்பி இவர் இப்படியெல்லாம் செய்வார்னு எனக்கு தெரியாது ஸார்" என்கிறார் லக்கிலுக் பரிதாபமாக.
அதன்பின் ஆவேச கூச்சல்கள், குழப்பங்கள், விவாதங்கள் என ஒருவழியாக கூட்டம் இனிதே முடிவடைந்தது.
சரி பானம் அருந்த அழைத்து செல்வார்கள் என காத்திருக்க அனைவரும் சிறு சிறு குழுக்களாக கலைந்தனர். நம்மை ஒருவரும் கவனிக்கவில்லை. நமக்கோ கை கால் உதற ஆரம்பித்தது.
"ஏய்! நாங்க பாட்டுக்கு கம்முனுதான்யா இருந்தோம். நீங்கதானே பானம்லாம் தருவாங்கன்னு கூப்பிட்டீங்க. இப்போ எங்கேய்யா போனீங்க?" என முரளிக்கண்ணனைத் தேட அவரோ முதல் ஆளாக எஸ்ஸாகியிருந்தார்.
இப்படியாக நாங்கள் கலந்துகொண்ட வலைப்பதிவர் சந்திப்பு இனிதே முடிவடைந்தது.
என்னா பண்றது? பதிவு போட்டு நாளாச்சு. ஆர்வத்திலே நாளைக்கு மாலை வலைப்பதிவர் சந்திப்புக்கு வேற வரேன்னு சொல்லிட்டோ ம். அங்கே வந்து மொக்கைபோட ஒரு மொக்கைபதிவாவது வேணும்ல. அதான் ஹி. ஹி...
எப்படியும் சந்திப்பு முடிஞ்சவுடன் எல்லோரும் அரக்கஒஅரக்க ஓடிப்போய் போண்டா வேகலை, டீ யில் சர்க்கரை கம்மி அப்படின்னு எல்லா மேட்டரையும் அவசரமாக எழுதி மீ த பர்ஸ்ட்ன்னு தண்டோ ரா போடுவாங்க. அதனாலதான் நாங்க ஒருநாள் முன்னதாகவே பதிவு டோட்டுவிட்டோம்.
இப்போ நாங்கதான் மீஇஇஇஇ... த பர்ஸ்ட்........
சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு(8-6-08)
மொக்கை வகை
மொக்கை
Subscribe to:
Posts (Atom)